கோத்தகிரி : கோத்தகிரி ஜக்கனாரை ஜெடையலிங்க சுவாமி கோவிலில், குண்டம் திருவிழா சிறப்பாக நடந்தது. இவ்விழா நேற்று முன்தினம் துவங்கியது. பூ குண்டத்திற்கு, குரும்பர் இன ஆதிவாசி மக்கள், கற்களை உரசி, அங்கிருந்து வெளியேறும் தீப்பொறியை வைத்து, தீ மூட்டும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. தொடர்ந்து, குரும்பர் இன மக்களுக்கே உரித்தான இசை கருவியை முழங்கி, ஐயனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அதிகாலை முதல், ஜக்கனாரை சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பகல், ஒரு மணியளவில், விரதம் மேற்கொண்டிருந்த பக்தர்கள் குண்டம் இறங்கினர். விழாவில், ஆடல்பாடல், ஆன்மிக சொற்பொழிவு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஊர் தலைவர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.