இவ்வுலகில் நடக்கும் அத்தனை தீமைகளுக்கும் மூல வேராக இருப்பது பணம் தான். “பணத்தாசை சகல தீமைகளுக்கும் ஆணிவேர்” என்கிறது பைபிள். சிரிப்புக்கும், கூத்துக்கும், கேளிக்கைக்கும் பணக்காரர்கள் விருந்து நடத்துகிறார்கள். அதில் பரிமாறப்படும் திராட்சை பானம் போதையை தருகிறது. ஏதோ ஒரு பலன் கருதி நடத்தப்படும் அந்த விருந்தில், பேசித் தீர்க்கப்படும் பிரச்னைகளில் பணம் கைமாறுகிறது.
எவ்வளவு கடினமான விஷயத்துக்கும் பணம் பதில் சொல்லி விடுகிறது.ஆனால், ஒன்றே ஒன்றை மட்டும் பணத்தால் வாங்க முடியாது. அதுதான் கடவுளின் கருணை. “கடவுளின் கருணையை உன் பணத்தால் விலைக்கு வாங்கி விடலாம் என நினைத்தால்,உன்னுடைய பணம் உன்னுடன் அழிந்து போகும்,” என்கிறது பைபிள். அது மட்டுமல்ல! பணத்தை கொண்டு சாதிக்கப்படும் செயல்கள், பின்னால் துன்பங்க ளையே விளைவிக்கும். பணத்துக்கு ஆசைப்பட்டு, லஞ்சம் வாங்கிவிட்டு, முகத்தை காட்ட அஞ்சி, துண்டுக்குள் முகத்தை புதைத்துக் கொள்கிறவர்கள் இருக்கிறார்கள்.