பதிவு செய்த நாள்
07
மார்
2018 
01:03
 
 பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேரோட்டத்தையொட்டிஇன்று முதல், மூன்று நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. மேலும், பாதுகாப்பை பலப்படுத்த போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, போலீஸ் கட்டுப்பாட்டு அறை அமைத்து, பொதுமக்களுக்கு அவ்வப்போது ஒலி பெருக்கி மூலமாக, ’ஜாக்கிரதையாக செல்ல வேண்டும்; குழந்தைகளை கூட்டத்தில் தவற விட்டு விடாதீர்கள்...’ என அறிவுரை வழங்கி வருகின்றனர்.திருவிழாவின், முக்கிய நிகழ்வான வெள்ளித் தேரோட்டம் இன்று துவங்குகிறது. தேரோட்டம் இன்று துவங்க உள்ள நிலையில், கூட்டம் அதிகமாக வரக்கூடிய ரோட்டில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கோவில் உட்பகுதி, வெளிப்பகுதி மற்றும் தேர் வடம் பிடிக்கப்படும் பகுதிகளில், டி.எஸ்.பி., தலைமையில், நான்கு இன்ஸ்பெக்டர், 25 சப் - இன்ஸ்பெக்டர்கள் உள்பட, 250 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். கோவிலைச்சுற்றி, 16 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தேரோட்டத்தையொட்டி, மூன்று நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. முதல் நாளான இன்று, கோவில் வளாகத்திலிருந்து மார்க்கெட் ரோடு வழியாக சென்று, வெங்கட்ரமணன் வீதியில், தேர் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதனால், கோட்டூர் ரோட்டில் வரும் வாகனங்கள் பத்ரகாளியம்மன் கோவில் ரோடு, உடுமலை ரோடு வழியாக பஸ்ஸ்டாண்ட் செல்லும் வகையில் மாற்றி விடப்படுகிறது. அதுபோன்று, திருவள்ளுவர் திடல் வழியாக வரும் வாகனங்கள், காந்தி மார்க்கெட் ரோடு, ராஜாமில் ரோடு வழியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இரண்டாம் நாள் வெங்கட்ரமணன் வீதியிலிருந்து புறப்படும் தேர், சத்திரம் வீதியில் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதனால், உடுமலை ரோட்டிலிருந்து பஸ்ஸ்டாண்டுக்கு வரும் வாகனங்கள் பல்லடம் ரோடு, நியூஸ்கீம் ரோடு வழியாக சென்றடையும்.மூன்றாம் நாள் சத்திரம் வீதியிலிருந்து கோவிலுக்கு தேர் சென்று நிலை நிறுத்தப்படும். அப்போது, சத்திரம் வீதியாக வரும் வாகனங்கள், பார்க் ரோடு வழியாக மாற்றம் செய்யவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். தேர் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகளில், துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.