கதலிநரசிங்கப்பெருமாள் கோயில் தெப்பம் சீரமைக்கப்படுமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20மார் 2018 12:03
ஆண்டிபட்டி;சேதமடைந்து வரும் ஜம்புலிபுத்துார் கதலிநரசிங்கப்பெருமாள் கோயில் தெப்பத்தை சீரமைத்து நீர் தேக்க அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பழமையான இக்கோயில் முகப்பில் உள்ள தெப்பம் அழகு சேர்க்கிறது. மழைக்காலங்களில் ஓடை வழியாக வரும் நீர் தெப்பத்தில் ஆண்டு முழுவதும் தேங்கி நிற்கும். கடந்த பல ஆண்டுக்கு முன்கோயிலுக்கு தேவையான நீர் தெப்பத்தில் இருந்து எடுக்கப்பட்டது. பக்தர்கள் பலரும் புனிதமாக கருதுகின்றனர். தெப்பத்திற்கான நீர் வரத்து கடந்த பல ஆண்டுகளாக திசை மாறி செல்கிறது. இதனால் மழை காலத்திலும் தெப்பம் நிரம்புவதில்லை. இதைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள படிக்கட்டுகள் பல இடங்களில் சரிந்து சேதம் அடைந்துள்ளது.
தெப்பத்தில் நீர் தேங்கினால் நிலத்தடி நீர் சமன் செய்யப்பட்டு, கிணறுகள், போர்வெல்களில் நீர் சுரப்பு அதிகமாகும். இந்த ஆண்டுக்கான 10 நாள் தேரோட்ட விழா அடுத்த மாதம் துவங்க உள்ளது. அதற்கு முன் தெப்பத்தை சீரமைக்கவும், நீர் வரத்து பகுதிகளை பராமரித்து, தண்ணீரை தேக்கி வைக்க அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.