திருக்கோவிலூர் :திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் வரும் 5ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு விழா நடக்கிறது. விழாவையொட்டி திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் கடந்த மாதம் 26ம் தேதி துவங்கி பகல்பத்து உற்சவம் துவங்கியது. இதன் நிறைவாக நாளை அதிகாலை 4 மணிக்கு பெருமாள் விஸ்வரூப தரிசனமும், 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும், 7 மணிக்கு திருப்பாவை சாற்றுமறை நிகழ்ச்சியும் நடக்கிறது. காலை 10 மணிக்கு ஸ்ரீ தேவி பூதேவி சமேத தேகளீச பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. மாலையில் பெருமாள் மோகனாவதாரத்தில் எழுந்தருள்கிறார். இரவு திருமங்கை ஆழ்வார் மோட்சம், சாற்றுமறை நடக்கிறது. இதனையடுத்து 5ம் தேதி அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு விழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஜீயர் ஸ்ரீநிவாச ராமானுஜாச்சாரிய சுவாமி உத்தரவின்பேரில் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.