பதிவு செய்த நாள்
26
மார்
2018
01:03
திருவண்ணாமலை: செய்யாறில் உள்ள, விஜய கோதண்டராமர் கோவிலில், ஸ்ரீராம நவமியை முன்னிட்டு, சீதா - ராமர் திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு டவுனில், ஸம்பாதி குடும்பத்தினரால், 300 ஆண்டுகளுக்கு முன், ஸ்ரீபாதுகா சேவக ஆஞ்சநேயர் கோவில் கட்டப்பட்டு, வழிபாடு நடந்து வந்தது. இந்த கோவிலில், ஸ்ரீமத் கந்தாடை ஸம்பாதி நரசிம்மாச்சாரியாரால், சீதா, லஷ்மண, ஸம்பாதி, ஹனுமன் சமேத விஜய கோதண்டராமர் கோவில் கட்டப்பட்டு, 1917ம் ஆண்டு, மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. ஆண்டுதோறும், இக்கோவிலில், ஸ்ரீராம நவமி, ஹனுமன் ஜெயந்தி, நவராத்திரி உற்சவம், விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று, 100வது ஆண்டையொட்டி, ஸ்ரீராம நவமி மகோற்சவத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.காலை, 6:30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 8:00 மணிக்கு ராமருக்கு விசேஷ திருமஞ்சனம், 10:30 மணிக்கு, யாகசாலை அமைத்து, விஷ்ணு சஹஸ்ரநாமம், சுதர்சன, மகாலஷ்மி, தன்வந்தரி ஹோமங்களும், மதியம் 1:00 மணிக்கு, மகா பூர்ணா ஹுதியும் நடந்தது.மாலை, 4:00 மணிக்கு, சீதா - ராமர் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. கோவிலில் உள்ள லஷ்மிநாராயணன், லஷ்மி ஹயக்ரீவர், ராமானுஜர், நம்மாழ்வார், தேசிகன் ஆகிய மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது.விழாவில், திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, ஸ்ரீகந்தாடை ஸம்பாதி ராமானுஜ ஐயங்கார் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர்.