பதிவு செய்த நாள்
26
மார்
2018
02:03
மீஞ்சூர் : மீஞ்சூர், ஏகாம்பரநாதர் கோவிலில், பங்குனி பிரம்மோற்சவத்தில், நேற்று, அதிகார நந்தி உற்சவம் வெகு விமரிசையாக நடந்தது. வடகாஞ்சி எனப்படும் மீஞ்சூர், காமாட்சி அம்பிகை உடனுறை ஏகாம்பரநாதர் கோவிலில், கடந்த, 21ம் தேதி கொடியேற்றத்துடன் பங்குனி பிரம்மோற்சவ விழா துவங்கியது.
ஏகாம்பரநாதர் கோவிலில், பரம்பரை அறங்காவலர் டாக்டர் சி அருண், கோவில் நிர்வாக அதிகாரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மேற்பார்வையில், கிராமத்தார் முன்னிலையில் பங்குனி பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. சூரியபிரபை, சந்திரபிரபை, பூத வாகனம், பஞ்சமூர்த்தி புறப்பாடு, நாக வாகனம், ரிஷப வாகனம் ஆகிய உற்சவங்கள் தொடர்ந்து நடைபெற்று உள்ளன. ஏகாம்பரநாதர், காமாட்சியம்மன், முருக பெருமான், விநாயகர், சண்டிகேஸ்வர் ஆகிய பஞ்ச மூர்த்திகளின் வீதியுலா தினமும் நடைபெறுகிறது. ஐந்தாம் நாள் நிகழ்ச்சியில், நேற்று, காலை, 9:00 மணிக்கு சர்வ அலங்காரத்துடன், ஏகாம்பரநாதர் உற்சவ பெருமான் அதிகார நந்தியில் எழுந்தருளி, மாடவீதிகளை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நாளை, காலை, 8:30 மணிக்கு மரத்தேரில், ரத உற்சவம் நடைபெற உள்ளது.