நாகப்பட்டினம் அருகிலுள்ள பொருள்வைத்தசேரி கிராமத்தில் தெய்வத்தன்மை வாய்ந்த சிற்பி ஒருவன் இருந்தான். “சரவணபவ” என்ற ஆறெழுத்து மந்திரத்தை ஓதி வந்த அவன், அழகிய ஆறுமுகன் சிலை செய்தான். அப்போது ஆட்சியில் இருந்த சோழ மன்னன், சிலையை கண்டு மகிழ்ந்தான். இது போல இன்னொரு சிலையை செய்யக் கூடாது என்பதற்காக, அந்த சிற்பியின் கட்டை விரலை வெட்டினான்.
சிற்பி வருத்தத்துடன் அருகிலுள்ள ஒரு கிராமத்திற்கு வந்தான். கைவிரல் இல்லாத நிலையிலும் விடாமுயற்சியால் மற்றொரு சிலை செய்தான். அப்பகுதியை ஆண்ட குறுநில மன்னன் முத்தரசன் அச்சிலையை காண வந்த போது, சிலை உயிர் பெற்று மயில் பறக்க ஆரம்பித்தது. மன்னன் அதை “எட்டிப்பிடி” என உத்தரவிட்டான். காவலர்கள் மயிலை பிடித்து, அதன் கால்களை சிறிதளவு உடைத்தனர். அதன் பின் மயில் மீண்டும் சிலையாகி அங்கேயே நின்றது. “எட்டிப்பிடி” என்பது காலப்போக்கில் “எட்டுக்குடி” ஆனது. நாகப்பட்டினம் – திருத்துறைப்பூண்டி சாலையில் 20 கி.மீ., தூரத்தில் எட்டுக்குடி உள்ளது.