பதிவு செய்த நாள்
28
மார்
2018
12:03
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண விழாவின், ஆறாம் நாள் உற்சவத்தில், ஏலவார்குழலி அம்பிகையுடன், ஏகாம்பரநாதர், வெள்ளி தேரில் பவனி வந்தார். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா, 21ல் துவங்கியது. அன்று முதல், தினமும், காலை, மாலையில், சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதியுலா வருகிறார். ஆறாம் நாள் உற்சவமான நேற்று முன்தினம் காலை, அறுபத்து மூன்று நாயன்மார்கள் திருக்கூட்டத்துடன், கண்ணாடி விமானத்தில் எழுந்தருளி, பஞ்சமூர்த்திகளுடன் வீதியுலா வந்தார். இரவு, வெள்ளித் தேர் உற்சவம் விமரிசையாக நடந்தது. இதில், ஏலவார்குழலி அம்பிகையுடன், மலர் அலங்காரத்தில், அலங்கரிக்கப்பட்ட வெள்ளி தேரில், ஏகாம்பரநாதர் எழுந்தருளி, நான்கு ராஜ வீதிகளில் பவனி வந்தார். கச்சபேஸ்வரர் கோவில் அருகில் வண்ணமயமான வாண வேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. வழிநெடுகிலும், ஏராளமான பக்தர்கள் காத்திருந்து, சுவாமியை தரிசனம் செய்தனர்.