காளையார்கோவில்: நாட்டரசன்கோட்டையில் நடைபெச்ற்ற ‘சேங்கை வெட்டு’ திருவிழாவில் 500 பெண்கள் மதுக்குடம் ஏந்தி ஊர்வலமாக சென்றனர். சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் ‘சேங்கை வெட்டு’ திருவிழா, மார்ச் 20ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
முதல் நாள் விழாவில் பக்தர்கள் கேழ்வரகு, கம்பு, நெல் போன்ற தானியங்களை மண் பானைகளில் ஊற வைத்தனர். நான்காம் நாள் விழாவில் அவற்றை வெந்நீரில் வேக வைத்து, அதிலிருந்து வரும் பாலை குடங்களில் வடித்து கோயிலுக்கு எடுத்து வந்தனர். அந்த பாலில் சிறிதளவை கோயிலுக்கு அருகில் உள்ள மரத்திற்கு ஊற்றிவிட்டு, பக்தர்களுக்கும் வழங்கினர். மீதமிருக்கும் பாலை வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர். திருவிழாவின் இறுதி நாளான நேற்று பெண்கள் ‘மது எடுப்பு’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ‘மதுக்குடங்கள்’ என்றழைக்கப்படும், வீடுகளில் பால் வைத்திருந்த மண் பானைகளை 500 க்கும் மேற்பட்ட பெண்கள், சிறுமிகள் ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு சென்றனர். அப்போது ஏராளமான ஆண்கள் அங்குள்ள தெப்பக்குளத்திற்குள் இறங்கி ‘சேங்கை வெட்டு’ எனப்படும் மண்எடுக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இத்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை வழிபட்டனர்.