அநாதிமுத்த சித்துரு ஆண்டவன்; அனாதிபெற்ற சித்துரு ஆன்மா. சூரியன் இருளை அறியான்; இருளும் சூரியனை அறியாது. நாம் இரண்டையும் அறிகிறோம். அதைப்போல, கடவுளும் பாசத்தை அறியார்; பாசமும் கடவுளை அறியாது. உயிர் இரண்டையும் அறியும். ஆன்மா பாசத்தைச் சார்ந்து நின்றபொழுது பசுவாயும், சிவத்தைச் சார்ந்து நின்ற பொழுது சிவமாயும் விளங்கும். ஆதலால், ஆன்மா சார்ந்ததன் வண்ணமாம் தன்மையுடையது என்பர். இறைவன் அனைத்தையும் உணர்வான். உயிர் உணர்த்த உணரும். கடவுள் சுதந்திரர். ஆன்மா சுதந்திரமற்றது.