பதிவு செய்த நாள்
04
ஏப்
2018
01:04
திருத்தணி: திருத்தணி மலைக்கோவிலில், பிரசாத கடையில் தரம் மற்றும் எடை குறைவாக பிரசாதங்கள் மற்றும் பஞ்சாமிர்தம் விற்பனை செய்வதாக, பக்தர்கள், ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, கோவில் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட கடையில் நேற்று, திடீர் ஆய்வு செய்தனர். திருத்தணி முருகன் கோவிலுக்கு, தினமும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, மூலவரை தரிசித்து செல்கின்றனர். பக்தர்கள் பிரசாதங்கள் வாங்குவதற்கு வசதியாக, கோவில் நிர்வாகம், தனியார் ஒருவருக்கு ஆண்டுதோறும் ஏலம் விடுகிறது. இந்த பிரசாத கடையில், சர்க்கரை பொங்கல், புளியோதரை, லட்டு, மிளகுவடை, முறுக்கு, பேரிச்சம்பழம், கற்கண்டு, புட்டழுந்து உட்பட, 20க்கும் மேற்பட்ட வகை பிரசாதங்கள் விற்கப்படுகின்றன. நடப்பாண்டில், கூடுதலாக பஞ்சாமிர்தம் விற்பனை செய்வதற்கு, கோவில் நிர்வாகம், ஒப்பந்தாரருக்கு அனுமதி கொடுத்தது. கடையை, ராமன் என்பவர் ஏலம் எடுத்துள்ளார். இந்நிலையில், பிரசாத கடையில் விற்பனை செய்யப்படும் பஞ்சாமிர்தம் மற்றும் பிரசாத பொருட்கள் தரமற்றதாகவும், எடை குறைவாகவும் இருப்பதாக, பக்தர்கள், இந்து அறநிலையத் துறை ஆணையருக்கு, புகார்கள் அனுப்பி வந்தனர்.
புகார் மீது விசாரணை நடத்தி அறிக்கை தர வேண்டும் என, திருத்தணி கோவில் நிர்வாகத்திற்கு, ஆணையர் கடிதம் அனுப்பினார். இதையடுத்து, திருத்தணி முருகன் கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் சிவாஜி ஆகியோர், நேற்று மலைக்கோவிலுக்கு சென்று, பிரசாத கடையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, பஞ்சாமிர்தம் எடை குறைவாகவும், தரமில்லாமல் இருந்ததையும் கண்டுபிடித்து, ஏலதாரரிடம் விசாரிக்கின்றனர். இது குறித்து, கோவில் இணை ஆணையர் சிவாஜி கூறியதாவது: மலைக்கோவிலில் உள்ள பிரசாத கடையில் எடை குறைவாக பஞ்சாமிர்தம் விற்பனை செய்வதாக புகார் வந்ததை தொடர்ந்து கடையில், நானும், தக்காரும் நேரில் சென்று ஆய்வு செய்தோம். எடை குறைவாகவும், தரமில்லாமலும் பிரசாதம் வழங்கப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. மேலும், பஞ்சாமிர்தம் பாட்டிலில் திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோவில் என்ற பெயரை பயன்படுத்திருந்ததை கண்டுபிடித்து, அதை பயன்படுத்தக் கூடாது என, அறிவுறுத்தியுள்ளோம். இது தவிர, மேற்கண்டவைக்கு தகுந்த விளக்கம் அளிக்குமாறு, ஒப்பந்தாரருக்கு, ’நோட்டீஸ்’ அனுப்பவும் முடிவு செய்தோம். ஓரிரு நாளில் நோட்டீஸ் வழங்கி, பதில் பெறப்படும். இவ்வாறு அவர் கூறினார்.