பதிவு செய்த நாள்
29
ஜன
2026
12:01
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழா நேற்று(ஜன.28) நடந்தது. போலீசாரின் கெடுபிடியால் பக்தர்கள் அவதிக்குள்ளாகினர்.
நேற்று காலை சுவாமி, தெய்வானை கோயிலில் இருந்து புறப்பாடாகி ரத வீதிகளில் வீதி உலா முடிந்து தெப்பக்குளத்தில் அமைக்கப்பட்டிருந்த மிதவை தெப்பத்தில் எழுந்தருளினர். பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தெப்பம் 3 முறை சுற்றி வந்தது.
மாலை 6:30 மணிக்கு தெப்பக்குளம் மைய மண்டப ஊஞ்சலில் சுவாமி, தெய்வானை எழுந்தருளி பத்தி உலாத்துதல் முடிந்து மீண்டும் மிதவை தெப்பத்தில் எழுந்தருளினர். திருவிழா முடிந்து சுவாமி தங்க குதிரை வாகனத்தில் சன்னதி தெரு சொக்கநாதர் கோயில் முன்பு எழுத்தருளினார். அங்கு சூரசம்ஹார லீலை நடந்தது.
அறங்காவலர் குழுத் தலைவர் சத்யபிரியா, அறங்காவலர் சண்முகசுந்தரம், துணை கமிஷனர் யக்ஞ நாராயணன், கண்காணிப்பாளர்கள் சத்யசீலன், சுமதி, தி.மு.க., தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் பாலாஜி கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு
வழக்கமாக தெப்பத்தின் வடத்தை பக்தர்கள், பொதுமக்கள் பிடித்து இழுக்க மிதவை தெப்பம் மூன்று முறை சுற்றி வரும். நேற்று இரவு தெப்பக்குள கரையைச் சுற்றியுள்ள மதில் சுவரிலிருந்து 20 அடி தூரத்திற்கு தாண்டி இரும்பு தடுப்புகள் அமைத்து பக்தர்களை போலீசார் கட்டுப்படுத்தினர். பக்தர்கள் வடம் பிடிக்க முடியவில்லை. கோயில் பணியாளர்கள் இழுத்தனர்.
தெப்பக்குள கரையில் அனைத்து இடங்களிலும் போலீசார் தடுப்புகள் அமைத்ததால் பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாமல் அவதி அடைந்தனர். தெப்பம் சுற்றி முடிந்த பின்பும் தரிசனத்திற்கு செல்ல தடை விதித்ததால் போலீசாருடன் பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மதியம் 3:00 மணியிலிருந்து புளியமரம் பஸ் ஸ்டாப், 16 கால் மண்டபம் அருகே வாகனங்களுக்கு போலீசார் தடை விதித்ததால் மக்கள் வீடுகளுக்கு செல்ல முடியாமல் அவதி அடைந்தனர். பலர் தியாகராஜர் இன்ஜினியரிங் கல்லூரி சுற்றிவந்து வீடுகளுக்கு சென்றனர்.