பதிவு செய்த நாள்
04
ஏப்
2018
02:04
ஈரோடு: ஈரோடு, பெரிய மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில், சின்ன மாரியம்மன் கோவில் தேரோட்டம், இன்று காலை நடக்கிறது. ஈரோடு மாநகரில் பிரப் ரோட்டில், பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. மகப்பேறு வேண்டுவோர், 45 வெள்ளிக்கிழமைகளில் கோவிலுக்கு வந்து வணங்கி, மகப்பேறு அடைகின்றனர். நோய் வந்தோருக்கு விரைவில் சுகம் கிடைக்கிறது. இக்கோவிலுடன் இணைந்த சின்ன மாரியம்மன் கோவில், பெரியார் வீதியில் உள்ளது. இந்த இரு கோவில்களுக்கும் இடையே வாய்க்கால் மாரியம்மன் கோவில் உள்ளதால், இதை நடுமாரியம்மன் என்று அழைப்பர். இக்கோவில்களில் தற்போது, பங்குனி குண்டம் திருவிழா நடந்து வருகிறது. மூன்று கோவில்களையும் இணைத்து நடப்பதால், ஊரே விழாக்கோலம் பூணும். காரைவாய்க்கால் மாரியம்மன் கோவிலில், நேற்று தீ மிதி விழா நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் குண்டம் இறங்கினர். இன்று காலை, 9:30 மணிக்கு பொங்கல் வைபவம், சின்ன மாரியம்மன் கோவிலில் தேர் வடம் பிடித்தல், மீண்டும் மாலை, 4:00 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், வடம் பிடித்து இழுப்பார்கள். நாளை, மாலை, 4:00 மணிக்கு மீண்டும் தேர் வடம் பிடித்தலும், இரவு, 9:30 மணிக்கு பெரிய மாரியம்மன் மலர் பல்லக்கில் திருவீதியுலாவும், 6ல் மாலை, 4:00 மணிக்கு தேர் வடம் பிடித்து சின்ன மாரியம்மன் கோவில் நிலை சேர்கிறது. அன்றிரவு, சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் மலர் பல்லக்குகளில் வீதியுலா நடக்கிறது. ஏற்பாடுகளை உதவி ஆணையர் முருகையா, செயல் அலுவலர் ரமணிகாந்தன் செய்து வருகின்றனர்.