பதிவு செய்த நாள்
05
ஏப்
2018
01:04
திருப்பூர்:கருவலுார் மாரியம்மன் கோவில் தேரோட்டம், நேற்று கோலாகலமாக நடந்தது. பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்று தரி சித்தனர். அவிநாசி அருகே கருவ லுாரில், பிரசித்தி பெற்ற கருவலுார் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் பங்குனி தேர்த்திருவிழா, கடந்த மாதம், 30ல், கிராமசாந்தியுடன் துவங்கியது. 31ல், திருவிழா கொடியேற்றமும், அதை தொடர்ந்து தினமும், சிம்ம வாகனம், பூத வாகனம், ரிஷப வாகனங்களில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.
நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு, புஷ்ப விமான பல்லக்கில் அம்மன் எழுந்தருளினார். அம்மன் அழைப்பை தொடர்ந்து, திருக்கல்யாண உற்சவமும், யானை வாகனத்தில் அம்மன் திருவீதி உலாவும் நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான, தேரோட்டம் நேற்று துவங்கியது. காலை, 6:00 மணிக்கு, தங்க காப்பு அலங்காரத்தில், அம்பாள் திருத்தேருக்கு எழுந்தருளினார். மாலை, 4:30 மணிக்கு, திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. சக்தி கோஷம் முழங்க, பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுந்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு மத்தியில், தேர் அசைந்தாடி வந்தது. நேற்று மாலை, முதல்நிலையை அடைந்ததும், பக்தர்கள் கை தட்டி, ஆரவாரம் முழங்க, தேர் நிறுத்தப்பட்டது.
இன்றும், நாளையும் தேரோட்டம் நடக்கிறது. நாளை மாலை, திருத்தேர் நிலை சேருகிறது. வரும்,7ம் தேதி இரவு, 10:00 மணிக்கு, தெப்ப உற்சவமும்; காமதேனு வாகனத்தில் அம்மன் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடக்கிறது. இரவு, 12:00 மணிக்கு, குதிரை வாகனத்தில் எழுந்தருளி பரிவேட்டை நடக்கிறது. வரும், 8ம் தேதி, காலை, 7:00 மணிக்கு, மகா தரிசனம், மாலை, 3:00 மணிக்கு, மாரியம்மன் சப்பரத்தில் புறப்பாடு, இரவு, 8:00 மணிக்கு, அன்ன வாகனத்தில் எழுந்தருளல், மஞ்சள் நீர் உற்சவம் நடக்கிறது.