பதிவு செய்த நாள்
16
ஏப்
2018
03:04
ஆர்.கே.பேட்டை: திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில், இன்று மாலை, அர்ச்சுனன் தபசு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கான பனை மரத்தை தேர்வு செய்வதில், பக்தர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். உற்சவர் சிலைகளை மட்டுமே வைத்து நடத்தப்படும் திருவிழாக்களுக்கு மத்தியில், கடவுளாக மதிக்கப்படும் இதிகாச நாயகர்களின் வேடம் தரித்து, நாடக கலைஞர்கள் வலம் வரும் தீமிதி திருவிழா, கிராமங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த திருவிழாவில், காப்பு கட்டி, விரதம் மேற்கொண்டு, அக்னி குண்டத்தில் இறங்குவதை, வெளியூர் வாழ் பக்தர்களும் தங்களின் கடமையாக கொண்டுள்ளனர். ஆர்.கே.பேட்டை, திரவுபதியம்மன் கோவில், தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி, நடந்து வருகிறது. வியாழக்கிழமை முதல், தெருக்கூத்து நிகழ்ச்சி நடந்து வருகிறது. மின்னொளி அலங்காரத்தில் கோவில் வளாகம் ஜொலிக்கிறது. 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகள்முடிவுக்கு வந்துள்ள நிலையில், இளம் பக்தர்களின் கூட்டம், கோவில் வளாகத்தில் குழுமி உள்ளது. இந்நிலையில், இன்று மாலை, முக்கிய நிகழ்வான, அர்ச்சுனன் தபசு நடைபெற உள்ளது. இதற்கான, பனை மரத்தை தேர்வு செய்வதில், பக்தர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். வரும் வெள்ளிக்கிழமை இரவு, அலகு பானையும், ஞாயிற்றுக்கிழமை காலை, துரியோதனன் படுகளம், அன்று மாலை, அக்னி பிரவேசமும் நடைபெறும்.