பதிவு செய்த நாள்
09
ஜன
2012
10:01
சிதம்பரம்:சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நேற்று நடந்தது. உடுக்கை, தாள, தம்பட்டம் முழங்க நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் திருநடனம் புரிந்தபடி, ஆயிரங்கால் மண்டபத்தில் காட்சி கொடுக்க, பக்தர்கள் பரவசத்தில் கைத்தட்டி, ஆரவாரத்துடன் தரிசனம் செய்தனர்.கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா, கடந்த, 30ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. நேற்று முன்தினம், காலை தேரோட்டம் நடந்தது. நேற்று அதிகாலை, 4 மணிக்கு நடராஜர், சிவகாம சுந்தரி அம்பாள் ஆயிரங்கால் மண்டப வாயிலில் எழுந்தருள செய்யப்பட்டு, சந்தனம், தேன், பால், தயிர், இளநீர், விபூதி, புஷ்பம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்விக்கப்பட்டது. 4 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில், உடுக்கை, தாளம், தம்பட்டம் முழங்க நடராஜரும், சிவகாம சுந்தரி அம்பாளின் தரிசன காட்சியைப் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மெய்சிலிர்க்க கைத்தட்டி, ஆரவாரத் துடன் தரிசனம் செய்தனர்.
ராமநாதசுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசனம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் நேற்று அதிகாலை, 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, மூன்றாம் பிரகாரத்திலுள்ள நடராஜர் சன்னிதியில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. தொடர்ந்து கோபூஜை, கன்னிகா பூஜையுடன் பரமேஸ்வரனுக்கு பூஜை செய்து சன்னிதியில் உள்ள பெரிய திரை விலக்கப்பட்டு, நடராஜர் ஆருத்ரா தரிசன கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் மூன்றாம் பிரகாரத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்தனர்.
உத்தரகோசமங்கையில் நடராஜருக்கு சந்தனம் சாற்றுதல்: ராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோவிலில், ஆறடி உயர மரகத கல்லால் ஆன நடராஜர் சிலை உள்ளது. நேற்று முன்தினம் காலை, மரகத நடராஜர் சிலைக்கு சந்தனம் களையப்பட்டு, ஆருத்ரா தரிசனம் நடந்தது. ஆருத்ரா தரிசன நிறைவாக நேற்று அதிகாலை, 12.30 மணி முதல் அபிஷேகம் ஆரம்பித்து, அதிகாலை 3 மணிக்கு சந்தனம் சாற்றும் நிகழ்ச்சி நடந்தது. பின், ராஜதரிசனம் நடந்தது. மரகத நடராஜரை தரிசிக்க, வெளிமாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் இசை வாசிக்க எதிர்ப்பு: விருத்தாசலம், விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம், நேற்று நடந்தது. காலை முதல் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடந்தன. பின், தரிசனத்திற்காக நடராஜரை பல்லக்கில் வைத்து, கோவில் உட்பிரகாரத்தில் அர்ச்Œகர்கள் ஊர்வலமாக கொண்டு சென்றனர். அப்போது, சிவகான பூதகான நாதர் இசை திரு கூட்டம் அமைப்பைச் சேர்ந்த சிவனடியார்கள், சாமி ஊர்வலத்திற்கு முன்பு இசை வாசித்தனர். உடன், அர்ச்சகர்கள் சாமியை கீழே இறக்கி வைத்து விட்டு, "இசை வாசிப்பவர்களை வெளியேற்றினால் தான் சாமி ஊர்வலம் நடக்கும் என்றனர்.இசை வாசிப்பவர்கள், நாங்கள் வாசிப்போம் என கூறியதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார், வருவாய் துறை அதிகாரிகள் அர்ச்சகர்கள், மற்றும் சிவ பக்தர்களிடம் @பச்”வார்த்தை நடத்தியும் தீர்வு ஏற்படவில்லை. பின், சிவனடியார்களை வலுக்கட்டாயமாக, அங்கிருந்து வெளியேற்றினர் அதன்பிறகு, சாமி ஊர்வலம் நடந்தது.
தாமிர சபை, சித்திர சபையில் ஆருத்ரா தரிசனம்:நடராஜர் திருநடனம் புரிந்த பஞ்ச சபைகளில் தாமிர சபை நெல்லையிலும், சித்திர சபை குற்றாலத்திலும் உள்ளது. திருவாதிரை உற்சவத்தை முன்னிட்டு, தாமிர சபையில் இரவு நடராஜ பெருமானுக்கு திருநீராட்டும், சிறப்பு தீபாராதனையும் நடந்தது. பின், தாமிர சபையில் நடராஜர் திருநடன காட்சியும், நடன தீபாராதனையும், ஆருத்ரா தரிசனமும் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். குற்றாலம் சித்திர சபையிலும் நேற்று காலை ஆருத்ரா தரிசன திருநடன நிகழ்ச்சி நடந்தது.