பதிவு செய்த நாள்
09
ஜன
2012
10:01
திருவனந்தபுரம் : பத்மநாப சுவாமி கோவில் பாதாள அறைகளில் பாதுகாக்கப்பட்டு வரும் பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள பொக்கிஷங்களை மதிப்பீடு செய்யும் பணிக்காக, இரண்டரை கோடி ரூபாயை கேரள மாநில அரசு ஒதுக்கியுள்ளது. கேரள தலைநகர் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் பாதாள அறைகளில், பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள பொக்கிஷங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவற்றை மதிப்பீடு செய்ய, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அந்தப் பணிக்காக வேலாயுதன் நாயர் தலைமையில் ஐவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பொக்கிஷ மதிப்பீடு செய்யும் பணிக்காக, அதிநவீன தொழில்நுட்ப வசதி கொண்ட 3டி கேமராக்கள், அனலைசர் கருவி என, பல உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளன. வேறு பல உபகரணங்களுக்கும் ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான தொகை இன்னும் ஒரு வாரத்தில் வழங்கப்படும் என, அரசு வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. ஆனால், நேற்று முன்தினம் மாநில அரசு கூடுதல் தலைமைச் செயலர் ஜெயக்குமார் கூறுகையில், "பத்மநாப சுவாமி கோவில் பொக்கிஷங்கள் மதிப்பீடு பணிக்காக, அரசு 2.5 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. அவசர செலவுகளை மேற்கொள்ள இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது என்றார்.