பதிவு செய்த நாள்
09
ஜன
2012
11:01
குற்றாலம் : குற்றாலம் குற்றாலநாதர் கோயிலில் திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு ஆருத்ரா தரிசனம் நடந்தது. குற்றாலம் குற்றாலநாதர் கோயிலில் ஆண்டுதோறும் திருவாதிரை திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு திருவாதிரை திருவிழா கடந்த மாதம் 30ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலை, மாலையில் சுவாமி, அம்பாள் சப்பரத்தில் எழுந்தருளலும், நடராஜமூர்த்திக்கு தாண்டவ தீபாராதனையும் நடந்தது. கடந்த 3ம் தேதி தேரோட்டம் நடந்தது. இதில் நடராஜர், குற்றாலநாதர், குழல்வாய்மொழியம்மை, விநாயகர், சுப்பிரமணியர் தேர்கள் இழுக்கப்பட்டன. விழாவின் முக்கிய நாளான நேற்று அதிகாலையில் சித்ரசபையில் நடராஜர் ஆருத்ரா தரிசனமும், தாண்டவ தீபாராதனையும் நடந்தது. இதன் பின்னர் கோயில் திரிகூட மண்டபத்தில் நடராஜருக்கு நறுமணப் பொருட்களால் மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. நடராஜருக்கு தாண்டவ தீபாராதனை நடந்தது. தாண்டவ இசைக்கு ஏற்ப நடந்த இந்த தாண்டவ தீபாராதனையை திரளான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சுவாமி வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்ச்சியில் கோயில் நிர்வாக அதிகாரி சுகுமாரன், அம்பாசமுத்திரம் சப்-கோர்ட் நீதிபதி கருப்பையா, வர்த்தக சங்க தலைவர் ராமையா, முன்னாள் அறங்காவலர் வீரபாண்டியன், வக்கீல் செந்தூர்பாண்டியன், ஆயான் நடராஜன், ராசி சுரேஷ், மேலகரம் ஈஸ்வரன், கோயில் கணக்கர் முருகேசன், பரமசிவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.