பதிவு செய்த நாள்
23
ஏப்
2018
01:04
எண்ணுார்: எண்ணுாரில் உள்ள புனித சூசையப்பர் ஆலயத்தில், 57ம் ஆண்டு ஆசிர்வாத பெருவிழா, 12ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. இதைத் தொடந்து, 13 முதல், 20ம் தேதி வரையிலான எட்டு நாட்களும், ஆசிரியர், தம்பதி, உழைப்பாளர், நலம் நாடுவோர், நற்கருணை தினம் என, பல்வேறு தினங்களாக கொண்டாடப்பட்டன. பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் பவனி, நேற்று முன்தினம் இரவு, நடைபெற்றது. முன்னதாக, மயிலை முன்னாள் பேராயர், சின்னப்பா ஆண்டகை பங்கேற்ற, திருப்பலி நடந்தது. பின், மிக்கல் துாதர், ஆரோக்கிய அன்னை மாதா, அந்தோணியர், செபஸ்டியர், புனித சூசையப்பர் ஆகியோர் எழுந்தருளிய நிலையில் தேர் பவனி நடைபெற்றது. சாலையோரம் காத்திருந்த பொதுமக்கள், மல்லிகை, ரோஜா மலர்களை துாவி, பவனியை வரவேற்றனர். கோவில் வளாகத்தில் துவங்கிய தேர் பவனி, எண்ணுார், கத்திவாக்கம் பாலம் வரை சென்று, அதே வழியில் ஆலயத்தை வந்தடைந்தது. இதில், 2,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றதால், கத்திவாக்கம் நெடுஞ்சாலையில், நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். நேற்று, பெருவிழா, சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன. இதில், பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி திருப்பலி நடத்தினார். நேற்று மாலை, கொடியிறக்கம், நன்றி திருப்பலிகளுடன் பெருவிழாநிறைவுற்றது.