பார்ப்பவர் வியக்கும்படியாக இணை பிரியாது இருந்தன இரு குதிரைகள். காரணம் இதில் ஒரு குதிரைக்கு கண் தெரியாது. அது இன்னொரு குதிரையின் கழுத்து மணிச்சத்தத்தை வைத்து அது செல்லும் இடங்களுக்கு பின் தொடரும். பார்வையற்ற குதிரை என்றாலும், அதன் உரிமையாளர் அன்போடு பராமரித்து வந்தார். ஒரு நாள் மேய்ச்சல் முடிந்து, மணி கட்டிய குதிரை புறப்பட்டது. தன் இணை குதிரை பின்னால் வருகிறதா என அது அடிக்கடி திரும்பி பார்த்துக் கொண்டது. “தன் நண்பன் தன்னை தவறான வழியில் வழி நடத்தமாட்டான்” என்பது பார்வையற்ற குதிரையின் தீர்க்கமான நம்பிக்கை. சில நேரம் பார்வையற்ற குதிரை வராமல் இருந்தால், முன்னால் சென்ற குதிரை நின்று அதனை அழைத்துச் செல்லும். இந்த குதிரைகளின் எஜமானரைப் போலவே, குறைவுள்ளவர் களாகவும், பிரச்னைக்கு உரியவர்களாகவும், பயனற்றவர்களாகவும், நாம் இருந்தபோதும், ஆண்டவர் நிராகரிக்காமல் இருக்கிறார். பரிவுடன் கண்காணிக்கிறார். பார்வையற்ற குதிரைக்கு மணியோசையில் வழி காண்பித்தது போல அவருடைய வார்த்தைகளைக் கொண்டு வழிநடத்துகிறார். “ஒருவர் பாரத்தை இன்னொருவர் சுமந்து இப்படியே கிறிஸ்துவின் பிரமாணத்தை நிறைவேற்றுங்கள்” என்கிறது பைபிள்.