பதிவு செய்த நாள்
30
ஏப்
2018
02:04
பல்லடம்;ஆன்மிகம் கலந்த அறவழியில் செல்லுங்கள் என, கோவில் கும்பாபிஷேக விழாவில், சிரவை ஆதீனம் கூறினார். பல்லடத்தை அடுத்த, சின்ன வடுகபாளையம் கிராமத்தில் உள்ள, ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று நடந்தது. இதையொட்டி, திருவிளக்கு வழிபாடு, புனித நீர் வழிபாடு, விநாயகர், மற்றும் புற்றுமண் வழிபாடுகள் நடந்தன. தொடர்ந்து, முளைப்பாலிகை ஊர்வலம், விமான கலசங்கள் வைத்தல், வேள்வி, மலர் வழிபாடு ஆகியவை நடந்தன. தஞ்சை பழ அடியார், கோவை மெய்க்கண்ட அடிகளார், அன்னுார் திருப்புகழ் அரங்கசாமி அடிகளார் மற்றும் சாந்தலிங்க அருள்நெறி மன்ற பேராசிரியர் ஜெயபிரகாசம் ஆகியோர் வேள்வி வழிபாட்டை நடத்தினர். நேற்று காலை, புனித தீர்த்த குடங்கள், கோவிலில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. மாரியம்மன் மற்றும் கருப்பராயன் கோவில் கோபுர கலசங்களுக்கு, புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடைபெற்றது. சிரவை ஆதீனம் குமரகுருபர அடிகளார், பேரூராதீனம் இளையபட்டம் மருதாசல அடிகளார் மற்றும் தென்சேரிமலை முத்துசிவராமசாமி அடிகளார் ஆகியோர் கும்பாபிஷேகத்தை நடத்தி, அருளாசி வழங்கினர். குமரகுருபர அடிகளார் கூறுகையில்,சொந்த பணிகளுக்கு இடையே ஆன்மிக பணிகளிலும் ஈடுபட வேண்டும். குறிப்பாக, இன்றைய இளைஞர்கள், ஆன்மிகம் கலந்த அறவழியில் செல்ல வேண்டும். கோவில் பணிகள், மரம் வளர்த்தல் என, பொது வேலைகளிலும் ஈடுபட வேண்டு, என்றார். பக்தர்களுக்கு, கோவில் கமிட்டி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.