பதிவு செய்த நாள்
03
மே
2018
01:05
திருவிடந்தை: நித்ய கல்யாண பெருமாள் கோவிலுக்கு, ஜூலை 5ல், மஹா கும்பாபிஷேகம் நடத்த முடிவெடுத்துள்ளதாக, இணை ஆணையர், கே.பி.அசோக்குமார் தெரிவித்தார். மாமல்லபுரம் அடுத்த, திருவிடந்தையில், 108 வைணவ கோவில்களில், 62ம் கோவிலாக விளங்கும் நித்ய கல்யாண பெருமாள் கோவில் அமைந்து உள்ளது. கோவில் மூலவர் ஆதிவராக பெருமாள், அகிலவல்லி தாயாருடனும், உற்சவர் நித்ய கல்யாண பெருமாள், கோமளவல்லி தாயாருடனும் வீற்று, பக்தர்களுக்கு அருளாசி வழங்குகின்றனர். திருமணம், மகப்பேறு, ராகு, கேது தோஷ, பரிகார கோவிலாக விளங்கும் நிலையில், 2006ல் நடந்த கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து, மீண்டும் நடைபெறவில்லை. கோவிலை, வழிபாடு அடிப்படையில், தமிழக இந்து சமய அறநிலையத்துறையும், பாரம்பரிய சின்னம் அடிப்படையில், மத்திய தொல்லியல் துறையும் நிர்வகிக்கின்றன. மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த கருதி, மஹா மண்டப மேல்தள சீரமைப்பு, தரையில் கருங்கல் பதிப்பு உள்ளிட்டவற்றை நிறைவேற்ற, அறநிலைய நிர்வாகம், தொல்லியல் நிர்வாகத்திடம் வலியுறுத்தி, 2014 டிசம்பரில் பாலாலயம் செய்தது. அதைத்தொடர்ந்து, தொல்லியல் துறை, புனரமைக்க துவங்கி, தற்போது பெரும்பாலான பணிகள் முடிந்து, எஞ்சிய பணிகள் தீவிரமாக நடக்கிறது. அறநிலைய நிர்வாகமும், சேதமான கொடி மரத்தை அகற்றி, கடந்த ஏப்., 22ல், புதிய கொடி மரம் நட்டது. இந்நிலையில், தொல்லியல் பணிகள் முடிந்ததும், ஜூலை 5ல், கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவெடுத்துள்ளதாக, அறநிலைய, இணை ஆணையர், கே.பி.அசோக்குமார், தெரிவித்தார்.