பதிவு செய்த நாள்
05
மே
2018
01:05
அவன் பல வலிமையான பாணங்களால் அபிமன்யுவைக் காயப்படுத்தினான். ஆனால், அபிமன்யு தன் உடலில் இருந்து கொட்டும் குருதி கண்டு மிகுந்த ஆனந்தமும் ஆவேசமும் அடைந்து கர்ணனை நோக்கி விட்ட அம்புகள் அவனை நிலைகுலையச் செய்தன. கர்ணன் தன் தேருடன் தோற்றோடினான். பின்னர் கிருபாசாரியார் அபிமன்யுவுடன் போர்செய்ய வந்தார். அத்துடன் சகுனி, அவனது மகன் ஆகியோர் அவனைச் சூழவே, கோபமடைந்த அபிமன்யு ஒரு பாணத்தை விட அது சகுனியின் மகனின் தலையை அறுத்தெறிந்தது. சகுனி மிகவும் துன்பப்பட்டு போய்விட்டான். மகன் போன வருத்தத்தாலும், பயத்தாலும் திரும்பி ஓடினான். இதைப் பார்த்த விகர்ணன், துர்முசுகன் உள்ளிட்ட துரியோதனின் தம்பிகள் அபிமன்யுவைச் சூழ அவர்களையும் விரட்டிய அபிமன்யு பெரியப்பாமார்களே! நான் உங்களையும விட பலத்தில் உயர்ந்தவன், எனவே புறமுதுகிட்டு ஓடி பிழைத்துக் கொள்ளுங்கள், என வீர வசனம் பேசி ஏளனமாகச் சிரித்தான். இதைப் பார்த்த துரியோதனின் உள்ளம் கொதித்தது. ஒரு சிறுபயல், நமக்கெல்லாம் உயிர்பிச்சை தருவதா? கிருபாச்சாரியாரின் பாணங்களுக்கு கூட பதில் தரும் அவனை விட்டு வைத்தால் நம் படைக்கே ஆபத்து என்று சிந்தித்த வேளையில், அவனது முகக்குறிப்பைப் பார்த்து விட்ட பீமன், தர்மரின் அனுமதி பெற்று, அபிமன்யு அருகில் வந்து விட்டான். அபிமன்யுவைச் சுற்றி நின்ற பலநாட்டு மன்னர்களை கையில் வைத்தே நசுக்கி விட்டான். இதனால், பயந்து போன துரியோதனன், சிந்து தேசத்தின் அரசனும், தனது தேர்ப்படை சேனாதிபதியுமான ஜயத்ரதனை அழைத்தான்.
ஜயத்ரதா! அந்த அபிமன்யு சிறுவன் என இழிவாக எண்ணியிருந்தோம். ஆனால், அவன் விடும் பாணங்கள் நம் படையைச் சின்னாபின்னமாக்குகின்றன. கிருபர், துரோணர் ஆகியோரை அவனை வெல்ல முடியவில்லை. இந்த நிலையில் பீமன் வேறு அவனுக்கு அரணாக நிற்கிறான். முதலில் அவர்கள் இருவரையும் பிரிக்க வேண்டும். அதற்கு ஒரே வழி சிவபெருமான் உனக்களித்து உன் உடலில் சூடியிருக்கும் கொன்றை மாலை தான். இது உன் கழுத்தில் இருக்கும்வரை உன்னை யாராலும் கொல்ல முடியாது. அதே நேரத்தில் மூளையைப் பயன்படுத்த வேண்டிய நேரம் அது. எப்படியாவது சிரமப்பட்டு, பீமனுக்கும் அபிமன்யுவுக்கும் இடையில் இதை வீசி விடு. சிவனின் மாலை என்பதால், மரியாதை நிமித்தமாக. இதை அவர்கள் தாண்டமாட்டார்கள். இப்படி பீமனையும், அபிமன்யுவையும் பிரித்து விட்டு, சிவபெருமான் உனக்களித்த உன் கதாயுதத்தால் அபிமன்யுவை அடித்துக் கொன்று விடு, செய்வாயா? என்றான்.மகாப்பிரபு! தங்கள் உத்தரவு என் பாக்கியம். தாங்கள் சொன்னதை நிறைவேற்றி, தங்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்துவேன், என துரியோதனின் பாதம் பணிந்த ஜயத்ரதன், அபிமன்யுவை நெருங்கினான். துரியோதனன் சொன்னது போலவே, சமயம் பார்த்து மாலையை பீமனுக்கும், அவனுக்குமிடையே வீசினான்.
இதைக் கண்ட அபிமன்யு, மாலையைத் தாண்டக்கூடாது என்ற நிலையில், சிவபெருமானே! உன் கொன்றை மாலை என்னை ரக்ஷிக்கட்டும், என்று பணிந்து வணங்கினான். இறைவன் எல்லாருக்கும் பொதுவானவன். அவன், ஒருவருக்கு ஒரு பொருளைக் கொடுக்கிறான் என்றால் அது அவர்களைத் தற்காத்துக் கொள்ளவே தவிர, அடுத்தவர்களை அழிப்பதற்காக அல்ல! அபிமன்யுவும் பீமனும் ஒன்று சேர முடியாமல் தனித்து நின்று போர் புரிந்து கொண்டிருந்தனர். இதைப்பயன்படுத்தி, கர்ணன் உள்ளிட்ட வீரர்கள் அபிமன்யு மீது எதிர்தாக்குதல் நடத்தவே, கோபமடைந்த அபிமன்யு அவர்களையெல்லாம் விரட்டியடித்தான். துரோணர் உள்ளிட்ட பெரும் வீரர்களும் கூட அபிமன்யுவின் முன்னால் தோற்றோடினர். எப்படி பார்த்தாலும் இந்த சிறுவனை வீழ்த்தமுடியவில்லையே என்று இதயம் துடித்துப் போன துரியோதனனுக்கு கெட்ட நேரம் வந்தது. அவன் தன் மகன் லக்ஷணகுமாரனை பத்தாயிரம் வீரர்கள் புடைசூழ அனுப்பினான். இருவரும் கடுமையாகப் போரிட்டனர். அவனும் சாதாரணப்பட்டவன் அல்ல. போர்க்களத்திலும் புன்னகை சிந்தும் முகம் அவனுடையது. அந்தப் புன்னகை தவழ்ந்த முகத்துடன், அபிமன்யு, என்னால் உன் ஆயுளுக்கு முடிவு வரட்டும், என்று வீரவசனம் பேசி அம்புகளைத் தொடுத்தான். அவனோடு வந்த வீரர்களின் சிரத்தை ஒரு சில அம்புகளிலேயே அறுத்தெறிந்த அபிமன்யு, லக்ஷணகுமாரனின் மீதும் ஒரு பாணத்தை விட்டான். அந்த அம்பு அவனது தலையைக் கொய்தது. புன்சிரிப்புடன் கூடிய அந்தத்தலை துõரத்தில் போய் விழுந்தது கண்ட துரியோதனன், மகனே! வீரமரணத்தை தழுவினாயா? என் இதயம் நொறுங்கிப் போனதே!என கலங்கினான்.
அவன் துரோணரையும், கிருபாச்சாரியாரையும், தன்னைச் சார்ந்த அரசர்களையும் வரவழைத்தான். நான் கடைசியாகச் சொல்கிறேன். இனியும் என் மனம் பொறுக்காது. என் குமாரனைக் கொன்ற அந்தச்சிறுவனை ஒரு நொடியில் நீங்கள் எல்லாருமாய் சேர்ந்து அழித்தாக வேண்டும். இல்லாவிட்டால், எனக்கு இந்த அரசாட்சியும் வேண்டாம், போரும் வேண்டாம், இந்த உயிரும் வேண்டாம், என வருத்தமும் கோபமும் பொங்கப் பேசினான். எப்படியும் அபிமன்யுவை அழித்தே தீருவோம். அப்படி செய்யாவிட்டால் இனி வில்லையே எங்கள் கையால் தொடமாட்டோம், என சபதமிட்டு, வழக்கம் போல் முழக்கமிட்டனர் துரியோதனன் தரப்பினர். துரோணரும் அவர் மகன் அஸ்வத்தாமனும் அபிமன்யு அருகில் சென்றனர். மாவீரன் அஸ்வாத்தமனுக்கு கூட அபிமன்யுவின் முன்னால் நிற்கும் தைரியமில்லாமல் போனது. அம்புகளை அவன் வரிசைக்கிரமத்தில் அனுப்பினாலும் அத்தனையையும் அவன் பொடிப்பொடியாக்கினான். சிவபெருமானின் மைந்தன் முருகப்பெருமானை வெல்ல உலகில் யாருமில்லை. அதுபோல், இந்த வீரச்சிறுவனை வெல்வார் யார் என்ற கேள்வி எல்லோர் மனங்களிலும் எழுந்தது.