தன்னை நம்பி வந்து அடிபணிபவருக்கு கடவுள் தானும் எளியவனாகி அருள்புரிகிறார். அதே சமயத்தில் தன்னை வெறுக்கும் கல்மனம் கொண்டவருக்கோ, அரியவனாகி எட்டாதவராகிறார். கடவுள் ஒரே சமயத்தில் இந்த இரண்டையும் செய்த திருக் கோலமே நரசிம்ம அவதாரம். பிரகலாதனுக்கு அருள் புரிந்த அதே நிலையில் திருமால் நரசிம்மராக இரண்யனைச் சம்ஹாரம் செய்தார். குழந்தை பிரகலாதனிடம் இரண்யன்,“எங்கே உன் ஹரி?” என்ற கேட்டபோது, “அப்பா! கேள்வி கேட்கும் உங்களுக்குள்ளேயே இருக்கிறான். கேட்கும் கேள்வியின் ஒலியிலும் இருக்கிறான்,” என பதிலளித்தான் பிரகலாதன். எல்லா உயிர்களிலும் கடவுள் இருந்தாலும், பிரகலாதனைப் போல பக்திமனம் படைத்தவர்களே, அவரை தரிசிக்கும் பேறு பெறுகிறார்கள்.