சிதலமடைந்த வைகை கல் மண்டபம்: ரூ.60.75 லட்சம் ஒதுக்கியும் ஓராண்டாக இழுத்தடிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09மே 2018 12:05
மதுரை, மதுரை வைகை ஆறு கல்பாலம் அருகே உள்ள சிதிலமடைந்த பழமையான தீர்த்தவாரி கல் மண்டபம் பராமரிப்பு பணிக்கு நிதி ஒதுக்கியும் ஓராண்டாக கிடப்பில் கிடக்கிறது. மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான தீர்த்தவாரி கல் மண்டபம் காளிங்கராய மன்னரால் 1293ல் நிர்மாணிக்கப்பட்டது. கி.பி.1659 வரை மன்னர் திருமலை நாயக்கரால் பராமரிக்கப்பட்டு வந்தது. பின் பராமரிப்பற்ற நிலையில் 36 கல் துாண்களில் 12 துாண்கள் சிதிலமடைந்தன. கோயில் நிர்வாகம் சார்பில் பராமரிப்பு பணிக்கு கடந்தாண்டு ஏப்ரலில் 60 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. எனினும் பணி துவங்கவில்லை.மதுரை நுகர்வோர் பாதுகாப்பு மையம் பொதுச்செயலாளர் முனியசாமி: பராமரிப்பு பணி ஓராண்டாக பல காரணங்களை கூறி துவக்கவில்லை. ஒப்பந்தப்புள்ளி குளறுபடி, நீதிமன்ற தடை, அறநிலையத்துறை கமிஷனர் அனுமதி என தாமதம் ஏற்பட்டு தற்போது ’ெஹரிடேஜ் ஸ்கிரீனிங் கமிட்டி’ அனுமதி பெற ஏற்பாடாகி வருவதாக கோயில் நிர்வாகம் தெரிவிக்கிறது. பாரம்பரியம் அழிந்து விடாமல் தடுக்க கல் மண்டபம் புனரமைப்பு பணியை உடன் துவக்க வேண்டும், என்றார்.