பதிவு செய்த நாள்
11
மே
2018
12:05
ஊத்துக்கோட்டை:கோதண்டராம சுவாமி கோவிலில், 10 நாட்கள் பிரம்மோற்சவ விழா, நேற்று காலை, கொடியேற்றத்துடன் துவங்கியது. முதல் நாளில் உற்சவர் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். எல்லாபுரம் ஒன்றியம், பெருமுடிவாக்கம் கிராமத்தில் உள்ளது கோதண்டராம சுவாமி கோவில். பழமை வாய்ந்த இக்கோவிலில், ஒவ்வொரு ஆண்டும், சித்திரை மாதம், 10 நாட்கள் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெறும். இந்தாண்டு இவ்விழா, நேற்று காலை, 8:00 மணிக்கு, கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதை தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் மகா தீபாராதனை நடந்தது.பின், உற்சவர் கோதண்டராம சுவாமி, லட்சுமணர், சீதையுடன் கிராமத்தில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 10 நாட்கள் விழாவில், இன்று காலை, 8:00 மணிக்கு, உற்சவர் ஹம்ச வாகனத்திலும், இரவு, 8:00 மணிக்கு, சிம்ம வாகனத்திலும் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.