கம்பருக்கு ராமாயணம் எழுதுவதற்கு உதவி செய்தவர் வள்ளல் சடையப்பர். இவருக்கு நன்றிக்கடன் செலுத்தும் விதத்தில், ஒரு பாடலை, பட்டாபிஷேகத்தில் கம்பர் பாடியுள்ளார். அப்பாடலில், “ராவணனை வென்ற ராமருக்கு பட்டாபிஷேக ஏற்பாடு நடந்தது. அனுமன் சிம்மாசனம் தாங்க, பரதன் குடை பிடிக்க, லட்சுமணனோடு சத்ருக்கன் சாமரம் வீச, அங்கதன் வாள் ஏந்தி நின்றார். ராமருக்கு கிரீடத்தை எடுத்துக் கொடுக்க குலகுரு வசிஷ்டர் தயாரானார். ஆனால், அதற்கு முன்னதாக வள்ளல் சடையப்பரின் முன்னோர்கள் கிரீடத்தை தாங்கி வந்தனர். அதையே வசிஷ்டர் சூட்டினார்” என குறிப்பிடுகிறார். ஒருவர் செய்த புண்ணியமோ, பாவமோ சந்ததியைத் தொடரும் என்பர். ஆனால், கம்பர் போன்ற நல்ல மனம் கொண்டவர்களுக்கு உதவினால், அதன் பலன் சந்ததியோடு, முன்னோர்களையும் சேரும்.