பதிவு செய்த நாள்
19
மே
2018
05:05
காஞ்சிபுரம் சங்கர மடத்தில் ஒருநாள் மகாபெரியவர், பூஜை செய்வது குறித்து பக்தர்களுக்கு விளக்கினார். நவரத்தின வியாபாரி ஒருவர், தன் வீட்டில் பிட்சை ஏற்க துறவி ஒருவரை அழைத்தார். அதை ஏற்ற துறவி, ஒரு வெள்ளிக்கிழமை அன்று வியாபாரியின் வீட்டுக்கு எழுந்தருளினார். பூஜையறையில் வைக்கப்பட்டிருந்த பூக்களால் கடவுளுக்கு அர்ச்சனை செய்தார். பிறகு அவர் அளித்த உணவை சாப்பிட்டார். சற்று நேரம் ஓய்வெடுத்த பின், துறவி ஆஸ்ரமத்திற்கு புறப்படத் தயாரானார். அப்போது துறவி, “உன்னிடம் தோஷமுள்ள ரத்தினக்கல் வந்தால், அதையும் வியாபாரம் செய்வாயா” எனக் கேட்டார். “அது எப்படி முடியும் சுவாமி..... அதை ஒதுக்குவது தான் நல்லது. ஏனென்றால், வாடிக்கையாளர் மத்தியில் நம்பிக்கை போய் விடுமே” என்றார். “இன்று நீ கொடுத்த உணவில் அரிசி சுவையாக இருந்ததே... எங்கே வாங்கினாய்” என்று கேட்டார் துறவி. “வாங்கவில்லை சுவாமி, என் சொந்த நிலத்தில் விளைந்தது. அது மட்டுமில்லாமல், காய்கறிகள் கூட என் தோட்டத்தில் விளைந் தவை தான்”என்று பெருமையுடன் கூறினார்.
அதைக் கேட்ட துறவி சற்று உரத்த குரலில், “அதெல்லாம் சரி தான். ஆனால், பூஜைக்கு வைத்திருந்த மலர்களில் சில வாடியிருந்ததே. வில்வம், துளசியில் பூச்சி அரித்து ஓட்டை விழுந்திருந்தது. நிவேதனத்திற்கான பழங்களில் சில பழையதாக இருந்தன. வாடிக்கையாளர்களிடம் நல்ல பெயர் வாங்க விரும்பிய நீ பூஜைப் பொருட்களில் மட்டும் அலட்சியம் காட்டினாயே ஏன்? பகவான் நேரில் தோன்றி கேட்க மாட்டார் என்பதால் தானே...! கடவுளின் அருள் பூரணமாக கிடைக்க விரும்பினால் நம்மிடம் இருப்பதில் சிறந்ததை மட்டுமே அளிக்க வேண்டும். பூக்கள் புதியதாகவும், மணம் மிக்கதாகவும் இருக்க வேண்டும். விளக்கேற்றும் எண்ணெய் அல்லது நெய் சுத்தம் மற்றும் தரம் மிக்கதாகவும் இருக்க வேண்டும்,” என்றார் துறவி. நவரத்தினங்களை விட மதிப்பு மிக்க துறவியின் உபதேசத்தால், வியாபாரி பூஜைக்குரிய பொருட்களில் அக்கறை காட்டுவதாக உறுதியளித்தார் என்று கதையை முடித்தார் மகாபெரியவர். இதைக் கேட்ட பக்தர்களின் மனம், பூஜைக்குரிய புதுமலராக பிரகாசித்தது.