பதிவு செய்த நாள்
17
ஜன
2012
11:01
திருநெல்வேலி : பாளை., திரிபுராந்தீஸ்வரர் கோயிலில் வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம், 108 கலசாபிஷேகம் நடந்தது. பாளை., யில் பழமைவாய்ந்த கோமதி அம்பாள் சமேத திரிபுராந்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் பல லட்ச ரூபாய் செலவில் திருப்பணிகள் செய்யப்பட்டு, கடந்த ஆண்டு கும்பாபிஷேக விழா சிறப்பாக நடந்தது. கும்பாபிஷேகம் முடிந்து ஓராண்டு நிறைவடைந்ததை தொடர்ந்து வருஷாபிஷேக விழா தை பொங்கல் விழாவான நேற்று முன்தினம் மாலையில் துவங்கியது. விக்னேஷ்வர பூஜை, புண்யாக வாஜனம், பஞ்சகவ்யம், வேதிகார்ச்சனை, 1008 சங்கு பூஜை, 108 கலச பூஜை, முதல் யாகசாலை பூஜை, திரவ்யாகுதி, பூர்ணாகுதி தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடந்தது. வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று காலை விக்னேஷ்வர பூஜை, 2ம் கால யாகசாலை பூஜை, ருத்ர பாராயணம், திரவ்யாகுதி, பூர்ணாகுதி நடந்தது. காலை 9.30 மணிக்கு 10.30 மணிக்குள் 1008 சங்காபிஷேகம், 108 கலசாபிஷேகம், கோமதிஅம்பாள், திரிபுராந்தீஸ்வரர் விமானம், மூலஸ்தானம் வருஷாபிஷேகம், மகாபிஷேகம் நடந்தது. பூஜைகளை தூத்துக்குடி செல்வம் பட்டர் குழுவினர் நடத்தினர். தொடர்ந்து மகேஸ்வர பூஜையும், அன்னதானமும் நடந்தது. வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு பழனி வெங்கடேசன் ஓதுவார் குழுவினரின் தேவார இன்னிசை, பட்டினத்தார் என்ற தலைப்பில் நெல்லை கண்ணன் சொற்பொழிவு, சென்னை மேஸ்ட்ரோ ஜானகி-ஜானு குழுவினரின் பக்தி மெல்லிசை கச்சேரி நடந்தது.
ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் பாளை., திருச்சிற்றம்பல வழிபாட்டு அறக்கட்டளை உறுப்பினர்கள் செய்திருந்தனர்.