சாம்பவர்வடகரை ஐயப்பன் கோயிலில் மகரஜோதி திருப்படி பூஜை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜன 2012 11:01
கடையநல்லூர் : சாம்பவர்வடகரை சுவாமி ஐயப்பன் கோயிலில் தை மாத மகரஜோதி திருப்படி பூஜை கோலாகலமாக நடந்தது. கடையநல்லூர் அருகேயுள்ள சாம்பவர்வடகரை சுவாமி ஐயப்பன் கோயில் பிரசித்தி பெற்று விளங்கி வருகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலை போன்றே வடிவமைக்கப்பட்டுள்ள இக்கோயிலில் பக்தர்கள் சுதந்திரமாக கருவறை வரை சென்று சுவாமியின் பாதம் தொட்டு ஆண், பெண் பாகுபாடின்றி பூஜைகள் நடத்தி வருவதால் தமிழகத்தில் ஐயப்பன் கோயிலில் சாம்பவர்வடகரை கோயில் புகழ்பெற்று விளங்கி வருகிறது. இக்கோயிலில் மண்டல பூஜையை தொடர்ந்து மகரஜோதி தரிசன பூஜை கடந்த 14ம் தேதி காலை கணபதிஹோமத்துடன் ஆரம்பமானது. தொடர்ந்து பொங்கல் தினத்தன்று காலை கோ பூஜை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நெய் அபிஷேக நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். தொடர்ந்து 12 மணிக்கு விசேஷ தீபாராதனை நடந்தது. மாலை 6 மணிக்கு கற்பூர பூஜை நடந்தது. அதனை தொடர்ந்து சரண கோஷம் முழங்கிட கோயிலில் அமைந்துள்ள 18 திருப்படிகளுக்கும் கற்பூர தீபாராதனை நடந்தது. தை மாதத்தில் மகரஜோதி தரிசனமாக இப்பகுதி ஐயப்ப பக்தர்களால் கருதப்படும் இந்த கற்பூர தீபாராதனை பூஜையில் சாம்பவர்வடகரை, சுரண்டை, கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை, புளியங்குடி, சங்கரன்கோவில் மற்றும் விருதுநகர், மதுரை, கோயம்புத்தூர், சென்னை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர்.