பதிவு செய்த நாள்
17
ஜன
2012
12:01
உடுமலை : உடுமலை அருகே ஆல்கொண்டமால் கோவிலில், தமிழர் திருநாள் விழா இன்று நடைபெறுகிறது. உடுமலை அருகேயுள்ள சோமவாரப்பட்டியில் கால்நடைகளை காக்கும் தெய்வமான ஆயர்பாடி கண்ணன் சுயம்புவாக எழுந்தருளி, ஆலம் உண்ட உருவில் இருப்பதால் ஆல்கொண்டமாலாக பக்தர்களால் வழிபடப்படுகிறார். கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பெரும்பாலான விவசாயிகள் மாட்டு பொங்கலுக்கு அடுத்த நாள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளின் பாலினால் ஆல்கொண்டாமாலுக்கு பாலாபிஷேகம் செய்கின்றனர். பொங்கலையொட்டி மூன்று நாட்களுக்கு கோவிலில், தமிழர் திருநாள் விழா சிறப்பாக நடக்கிறது. இவ்விழா நேற்று சிறப்பு பூஜையுடன் துவங்கியது. இன்று அதிகாலை 5.00 மணிக்கு சிறப்பு அலங்காரம் தீபாராதனை, பாலாபிஷேகம் நடக்கிறது. பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்குச் சொந்தமான மைதானத்தில், வாணவேடிக்கை இன்று இரவு 9.00 மணிக்கு நடைபெறுகிறது. நாளை அதிகாலை 5.00 மணிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை, மாலை 6.00 மணிக்கு மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரம், இரவு 7.00 மணிக்கு மகா தீபாராதனை, இரவு 9.00 மணிக்கு சுவாமி திருவீதி உலா, வாணவேடிக்கை, தீபாராதனையும் நடக்கிறது.
சிறப்பு ஏற்பாடுகள்: சோமவாரப்பட்டி ஆல்கொண்டமால் கோவில் திருவிழாவையொட்டி, இந்து அறநிலையத்துறை சார்பில், குடிநீர் வசதி உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோவிலை சுற்றிலும் மேற்கூரை, தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. விழாவையொட்டி, அரசுத்துறைகளில் செய்துள்ள சாதனைகளை விளக்கும் வகையில், 15 அரசு துறைகள் சார்பில் கண்காட்சியும் நடைபெறுகிறது.
கிராமங்கள் கோலாகலம்: மார்கழி மாதம் முழுவதும் இரவு நேரங்களில் சலங்கை மாடு, தேவராட்டம், ஒயிலாட்டம், கும்மி ஆகிய நாட்டுப்புற கலைகளை ஆடும் கிராம மக்கள் திருவிழாவன்று கோவிலுக்கு நடந்து வந்து அனைத்து கலைகளையும் வளாகத்தில் ஆடி மகிழ தயாராகி வருகின்றனர். சலங்கை மாடுகளுக்கு சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. பல்வேறு கேளிக்கை விளையாட்டுகளும் திருவிழாவையொட்டி நடைபெறுகிறது.