பதிவு செய்த நாள்
04
ஜூன்
2018
11:06
பாலமேடு: பாலமேடு அருகே வலையபட்டி மஞ்சமலை அய்யனார் கோவிலில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது. விழாவில் நேற்று முன் தினம் அய்யனாருக்கு பூணுால் சாற்றினர். நேற்று அய்யனார், கருப்புசாமி, குதிரைகள், மற்றும் காளைகள், பசுக்கள், திருப்பாதங்கள், திருமண தம்பதிகள் உள்ளிட்ட 600க்கு மேற்பட்ட நேர்த்தி கடன் சிலைகளை, அரசம்பட்டியிலிருந்து ஊர்வலமாக எடுத்து வந்தனர். தொடர்ந்து வலையபட்டியில் அபிஷேகம் செய்து கண் திறந்தனர். பின்னர் மஞ்சமலை அய்யனார், ஈரடிகருப்புசாமி கோவிலுக்கு சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். இதில் துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர் உதயகுமார், கலெக்டர் வீர ராகவராவ், எம்.எல்.ஏக்கள், மாணிக்கம், சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் மதுரை உட்பட வெளிமாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையதுறை, 5 கிராம பொதுமக்கள் செய்தனர்.