பதிவு செய்த நாள்
04
ஜூன்
2018
11:06
திருத்தணி : இரண்டு திரவுபதி அம்மன் கோவில்களில், நேற்று நடந்த தீமிதி விழாவில், காலையில், துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும் மாலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி தீமிதித்தனர்.
திருவாலங்காடு ஒன்றியம், தாழவேடு மற்றும் தும்பிக்குளம் ஆகிய கிராமங்களில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில், தீமிதி திருவிழா கடந்த மாதம், 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலையில் மூலவருக்கு சந்தன காப்பு, மதியம், மகாபாரத சொற்பொழிவு, இரவு நாடகம் மற்றும் உற்சவர் அம்மன் வீதியுலா வந்தது. இந்நிலையில், நேற்று, காலை, 9:30 மணிக்கு, 18ம் நாளில், கோவில் வளாகத்தில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, கோவில் வளாகத்தில், திரளான பெண்கள் பொங்கல் வைத்து வழிப்பட்டனர்.காலை, 11:50 மணிக்கு அக்னி குண்டத்தில் தீ மூட்டும் நிகழ்ச்சியும், மாலை, 6:30 மணிக்கு பூகரகம் ஊர்வலத்துடன், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து, தீமிதித்தனர். பின், வாண வேடிக்கைகள், உற்சவர் திரவுபதியம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இன்று, காலை, 11:00 மணிக்கு, தர்மர் பட்டாபிஷேகம் நடக்கிறது.