பதிவு செய்த நாள்
04
ஜூன்
2018
11:06
சென்னை : எம்.ஜி.ஆர். நகரில் உள்ள, தேவி காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம், நேற்று வெகு விமரிமையாக நடைபெற்றது. எம்.ஜி.ஆர். நகர், சஞ்சய் காந்தி தெருவில், தேவி காமாட்சி அம்மன், சூலத்தரசி காளியம்மன், விநாயகர் மற்றும் முருகன் ஆகிய சுவாமிகள், ஒரே கோவிலில் அமைந்துள்ளன.இந்த கோவிலை புனரமைக்கும் பணிகள் முடிந்து, கும்பாபிஷேகம் நடத்த, கோவில் நிர்வாகத் தினர் முடிவு செய்தனர்.இதற்காக, 1ம் தேதி, கணபதி ஹோமம் மற்றும் முதல் கால யாக பூஜைகள் நடைபெற்றன. நேற்றுமுன்தினம், சுவாமிக்கு கோ பூஜையும், மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு, அஷ்டபந்தன மருந்து சாத்தும் நிகழ்வுகளும் நடைபெற்றன.
நேற்று காலை, 8:00 மணிக்கு, நான்காம் காலயாக பூஜைகள், சிறப்பு ஹோமங்கள் மற்றும் தீபாராதனைகள் நடந்தன. காலை, 11:00 மணிக்கு, விமான கோபுரத்துக்கு கும்பாபிஷேகமும், மூலவருக்கு, 11:15 மணிக்கு, மகா கும்பாபிஷேகமும் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சிகள் நடந்தன.விழாவையொட்டி, அன்னதானம் மற்றும் இன்னிசை நிகழ்ச்சிகளும் நடந்தன. கும்பாபிஷேக விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.