பதிவு செய்த நாள்
04
ஜூன்
2018
01:06
திருப்பத்தூரில் உள்ள திருக்கோயில் சிவகாம சுந்தரி உடனுறை திருத்தளிநாதர் திருக்கோயில். இக்கோயிலில் அபூர்வமான யோக பைரவர் கோயில் கொண்டிருக்கிறார். சிரகங்களுக்கு எல்லாம் அரசர் பைரவர். எல்லா கிரகங்களும் அவருக்குக் கட்டுப்பட்டவர்களே. எனவே சனிஸ்வரர், ராகு, கேது, குரு மற்றும் எந்த கிரக தோஷமானாலும் சரி பக்தர்கள் சாந்தி பரிகாரம் வேண்டி எந்த ஸ்தலத்துக்கும் போய் அலைய வேண்டாம். யோக பைரவர் எழுந்தருளியிருக்கும் இத்திருக்கோயிலுக்குச் சென்றால் போதும். ஏனென்றால் கிரகங்களை எல்லாம் ஆட்டிப் படைத்து ஆட்சி செய்பவர் யோக பைரவர், பைரவரைச் சரணடைந்து நெஞ்சம் உருக வழிபடுங்கள். சரணடைந்த தன் பக்தர்களைத் தேவையான நேரத்தில் வந்து காப்பாற்றுவர். எனவேதான் ஆபத்தாரண பைரவர் என்று போற்றப்படுகிறார். யோக பைரவருக்கு ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் அமாவாசைக்குப் பிறகு வரும் பிரதமை திதியிலிருந்து ஆறு நாட்கள் சம்பக சஷ்டி உற்சவம் நடைபெறுகிறது. பைரவர் திருஅவதாரங்களான அசிதாங்க பைரவர், ருருபைரவர், சண்டை பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பீஷண பைரவர், சம்ஹார பைரவர் ஆகிய அஷ்ட பைரவர்களுக்கும் ஒரே சமயத்தில் எட்டு விசேஷ வழிபாடுகள் நடக்கும்.
சம்பக சஷ்டி வரலாறு: ஹிரண்யாட்சகன் என்ற அரக்கன் பெரிய சிவபக்தன். இவன் குழந்தை வரம் வேண்டி தவம் புரிந்தான். தாருகாவன அழிவிற்குப் பிறகு ஈஸ்வரன் யோக நிஷ்டையில் இருக்கையில் பார்வதிதேவி விளையாட்டாக, ஈஸ்வரனின் கண்களை மூடிவிடுகிறாள். ஈஸ்வரன் கண்ணைத் திறந்தவுடன் ஹிரண்யாட்சனைப் பார்க்கிறார். ஹிரண்யாட்சகனுக்கு இரண்டு குழந்தைகள் பிறக்கின்றன. அதில் ஒன்று குருடாக இருந்ததால் அந்தகாசுரன். இரண்டாவது குழந்தை சம்பகாசுரன். இவர்கள் இருவரும் அதிபராக்கிரமம் படைத்தவர்களாக இருக்கின்றனர். இவர்கள் பெரிய சிவ பக்தர்கள். இவர்கள் தேவர்களைப் பல கொடிய இன்னல்களுக்கு ஆளாக்குகின்றனர். உலகெங்கும் ஒளியே இல்லாமல் இருக்கிறது. இருள் சூழ்ந்த உலகில் அசுரர்களின் தீயச் செயல்கள் பெருகுகின்றன. அசுரர்களின் மாயையால் இருள் சூழ்ந்து நின்ற உலகை விடுவிக்க, தேவர்கள் சிவபெருமானை வேண்டி நின்றனர். தாருகா (வனம்) புரம் அக்னி சாந்தமாகி சிவனின் நெஞ்சில் சிறு குழந்தையாக இருந்தது. அதை சக்தி தேவி தனது குமாரனாக எடுத்து வளர்த்து வந்தாள். தேவர்களின் துயர் நீக்க அக்னிக் குஞ்சுக்கு ஈசன் ஆணையில அதில் விஸ்வரூபம் எடுத்தவர் பைரவர். தேவர்களைக் காக்க எழுகிறார். முதலில் எட்டு பிரிவாக செயல்பட்டுப் பிறகு அறுபத்து நான்கு மூர்த்தங்களில் அறுபத்து நான்கு சக்தி கணங்களுடன் செயல்பட்டு அந்த காசுரனையும், சம்பகாசுரனையும் குமார சஷ்டியன்று வதம் செய்கிறார். தனது பூதகணங்களுடன் அவர்களைச் சேர்த்துக் கொள்கிறார்.
சிவபக்தர்களான அரக்கர்களை அழித்த தோஷம் நீங்குவதற்காக யோக பைரவர் தனது வலது கரத்தில் சிவலிங்கத்தை வைத்துக் கொண்டு பூஜை செய்து கொண்டு காட்சியளிக்கிறார். குமார ரூபமாக இருந்து அசுரர்களை வதம் செய்த நாளை குமார சஷ்டி என்றும் சம்பக சஷ்டி எனவும் அழைக்கப்பட்டு கார்த்திகை மாதம் அமாவாசையை அடுத்துவரும் பிரதமை திதியன்று காப்புக் கட்டுதல் விழாவுடன் துவங்குகிறது. ஆறு நாட்கள் விரதம் அனுஷ்டித்து தினந்தோறும் அஷ்ட பைரவர் ஹோமம் கொடிய துன்பம் தீர்த்து நெடிய இன்பத்திற்கு இந்தக் குமார சஷ்டி நாளில் விரதம் இருந்து வழிபட எல்லா நன்மைகளையும் தருவார் யோக பைரவர். (மதுரை - புதுக்கோட்டையில், திருப்பத்தூருக்கு இடையில் கோயில் உள்ளது. மதுரையிலிருந்து காரைக்குடி செல்லும் அனைத்துப் பேருந்துகளும் திருப்பத்தூர் வழியாக செல்லும், மதுரையிலிருந்து நிறைய பேருந்து வசதி உள்ளது.)