திருவாலி நாட்டுக்குத் தலைவனானவர் திருமங்கையாழ்வார். இது பற்றியே ஆலிநாடன் என்று அழைக்கப்படுகிறார். இவ்வாழ்வார் திருமந்திர உபதேசம் பெற்று வடக்கே பதரிகாச்ரமம் தொடக்கமாக எம்பெருமான்களைச் சேவித்து, பின்னர் திருவேங்கடம் அடைந்து, அந்தத்திவ்ய தேசத்தையும் திருவேங்கடவனையும் தொடர்ச்சியாக நான்கு பதிகங்களில் பாடியுள்ளார். அதில் துவய மந்திரத்தின் முதல் வாக்கியமான “ஸ்ரீமந்நாராயண சரணௌ சரணம் ப்ரபத்யே ” என்பதில் “சரணம் ” என்ற பதத்துக்குப் பொருளான விருப்பத்தைப் பெறவும் விரோதியை அழிக்கவும் தப்பாத உபாயமாக திருவேங்கடவனைப் பற்றுகிறார். “தாயே தந்தை ” என்னும் பதிகத்தில் திருவ÷ங்கடவனிடம் தம்மிடம் கைம்முதலின்மையை முன்னிட்டு சரணம் புகுகிறார். அடுத்த பதிகமான “கண்ணார் கடல் ” என்ற பதிகத்தில் தம்முடைய விரோதியைப் போக்க “அண்ணா! அடியேன் இடரைக் களையாயே ” என்று வேண்டுகிறார். இவ்விடத்தில் “அண்ணா ” என்ற சொல்லுக்குப் பெரிய வாச்சான் பிள்ளை “ஒரு காரணமின்றி இயற்கையான உறவுடையவனே!” என்று சுவையாக உரைப்பர். இப்படிப்பட்ட திருவேங்கடவன் விரோதியை அழிக்கும் சீல குணமுடையவன். எல்லாருக்கும் காப்பாளன், அடியார் கொடுக்கும் திரவியத்தாலல்லது தரியாதவன், அடியாருடன் கலத்தலையே தன்மையாக உடையவன், மிகவும் எளியவன், என்று போற்றி, “என்னுடைய விரோதியைப் போக்கித் தர வேணும். உன்னாலல்லது செல்லாமையைப் பிறப்பிக்க வேணும் ” என்று ஆழ்வார் வேண்டுகிறார். உடனே திருவேங்கடவன். “உம்முடைய எல்லா விருப்பங்களையும் செய்வதற்காகவன்றோ நாம் திருமலைக்கு வந்து நிற்கிறது” என்கிறான். இது தோற்ற திருமலையில் வலது கை அடையாளத்தாலே (ஸ்ரீஹஸ்த முத்ரையை) கீழ் நோக்கிக் காட்டி, பின்பு இவ்வாழ்வார் மனத்திலே வந்து பரபக்தி, பரஞானம் முதலானவற்றைப் பிறப்பித்தான என்கிறார்.
இயற்கையான உறவு உடையவன்: இராமாவதாரத்திலே இராவணனாலே வாழ்வை இழந்த தேவதைகள் இப்போது வந்து பற்றுவதற்கு ஏற்ற தன்மையனாய் திருமலையை இருப்பிடமாக உடையவன் ஒரு காரணமின்றி இயற்கையான உறவுடையவன் (நிருபாதிகபந்து) என்பதற்குச் சேர “விண்ணோர் தொழும் வேங்கட மாமலை மேய அண்ணா ” என்கிறார். அப்படிப்பட்ட எம்பெருமானை, இங்கு வாழ்வது இடர் என்று தன் நெஞ்சில்பட்ட பின்பு, தன் கைங்கர்ய விரோதியைப் போக்க “அடியேன் இடரைக் களையாயே என்று” வேண்டுகிறார் ஆழ்வார்.
விரோதியை அழிக்கும் தன்மையன்: இராவணனுக்கு முன்பு வாழ்ந்த மாலி. சுமாலி ஆகிய அரக்கர்கள் பாதாளத்தில் ஒளிந்து இருந்தார்கள். அவர்கள் மாளும்படி பெரிய திருவடி மேல் ஏறி கழற்றித் திரிந்தவன் இன்று சந்திர சூரியர்கள் நேரே போக முடியாமல் விலகிப் போக வேண்டும்படி ஓங்கின சிகரத்தை உடைய திருமலையில் காப்பதற்கு ஏற்ப கழுத்தில் மாலை இட்டு முடிசூடி இருக்கிறவனை “விலங்கல் குடுமி திருவேங்கடம் மேய அலங்கல் துளப முடியாய்!” என்று அழைத்து தன் விரோதியைப் போக்க அருள் புரிய வேண்டுகிறார்.
எல்லாரையும் காக்குமவன்: நீர் நிறைந்த கடல், பூமி மற்றுமுள்ள எல்லாப் பொருளையும் தன் வயிற்றிலே வைத்து மிக்க அழகியதாய் இளையதான ஆலந்தளிரிலே படுத்துக் கொண்டு எல்லாரையும் காத்தவனை “எந்தாய்! என்று சுவைபட உரைப்பர். அப்படிப்பட்டவன் பரமபதத்தைக் காட்டிலும் செல்வம் மிகுந்த திருமலையில் இருக்கிறான் என்பதற்குச் சேர “சீரார் திருவேங்கடமாமலையே மேய ” என்கிறார். இப்படிப்பட்ட காலமுள்ள அளவும் அநுபவித்தாலும் அமுதம் போன்று இனிமையாவன் என்று எண்ணும் தன் திறத்து அருள் புரிய வேண்டுகிறார்.
அடியார் இட்ட பொருள் கொண்டல்லது தரியாதவன்: இப்படி முன் பாடலில் மண்ணை உண்ட பிள்ளையாயும், கிருஷ்ணாவதாரத்திலே உறியில் சேமித்து வைத்த வெண்ணெயை உண்ட பிள்ளையாயும், வாமனாவதாரத்தில் குறளனாய் வேஷம் கொண்டு மண்ணை அளந்த பிள்ளையாயும் இருந்தவன் இப்போது பரமபதத்தளவும் ஓங்கின சிகரத்தையுடைய திருமலையிலே பொருந்தி நிற்கிறான் என்பதற்குச் சேர, “விண்டோய் சிகரத் திருவேங்கடம் மேய ” என்றதாக உரைப்பர் பெரிய வாச்சான் பிள்ளை. இப்படி இடையனாய் யசோதைக்கும் வாமனனாய் இந்திரனுக்கும் உதவி செய்து அவர்கள் பெற்ற பேற்றினளவல்லாத என்னுடைய விரோதியைப் போக்கி “அண்டா அடியேனுக்கு அருள் புரியாயே ” என்று கைங்கர்யத்தைத் தர வேண்டுகிறார் ஆழ்வார்.
அடியாரோடும் கலந்த தன்மையன்: முன்பே நரசிம்மத்தை வைத்துப் பண்ணிற்று என்று சொல்லாதபடிக்கு வெறும் தூணேயாய் இருக்கிற அதனுள்ளே நரசிம்மனாய்த் தோன்றி இரணியன் மார்பைப் பிளந்தான். அத்தகைய எம்பெருமான் மிக்க உயர்த்தியை உடையதாய் பெருமை பொருந்திய திருமலையிலே பொருந்தி இருக்கிறானாம். இதனை “சேணார் திருவேங்கடமாமலை மேய ” என்கிறார். மேலும் “ப்ரக்ருஷ் விஜ்ஞாந பலைக தாமநி” என்று ஆளவந்தார். அருளியபடியே உயர்ந்த ஞானத்துக்கும் வலிமைக்கும் நிகரற்ற இருப்பிடமானவனான திருவனந்தாழ்வானை படுக்கையாக உடையவன் என்பதற்குச் சேர “கோணாகணையாய்!” என்று உரைப்பர். இந்த இடத்தில் பெரிய வாச்சான்பிள்ளை பிராப்தி ஒத்திருந்த பின்பு திருவனந்தாழ்வான் பெற்ற பேறு தானும் பெற வேணும் என்ற ஆழ்வார் எண்ணத்தை “குறிக்கொள் எனை நீயே ” என்பதற்குச் சேர உரைப்பர். மேலும், திருவேங்கடவனானவன் நிலை இல்லாத இந்த மனிதப் பிறவியை விடுவித்து தனக்கு ஆளாக்கிக் கொண்டு தன்னுடைய இன்னருளைப் பண்ணும் தலைவன் என்பதற்குச் சேர “மன்னா இம் மனிதப்பிறவியை நீக்கித் தன்னின்னருள் செய்யும் தலைவன் ” என்கிறார். அதாவது “ப்ரக்ருதி ஸம்பந்த மற்றவனாய் புருஷோத்தமனுடன் மேலான ஒப்புமையை அடைகிறான்” என்ற முண்டக உபநிடதத் தொடரின் பொருளைக் காட்டி உரைப்பர் பிள்ளை. அவன் பிராட்டியுடன் சேர்ந்திருப்பதை மேகமும் மின்னலும் சேர்ந்தார்ப்போலே இருக்கிறது என்பதற்குச் சேர “மின்னார் முகில் சேர் திருவேங்கடம் ” என்று உரைப்பர். அப்படிப்பட்டவன் ஆழ்வார் நெஞ்சிலே வந்து புகுந்து நித்யவாசம் பண்ணி போக மாட்டேன் என்பதாக அநுபவிப்பர். இதனால் அடியாரோடு கலந்த தன்மை சொல்லப்பட்டதாயிற்று. பின்னர், நெஞ்சிலே புகுந்து போக மாட்டாத அளவு மட்டுமின்றி, வீர்ய சுல்கத்தாலே ஏழு எருதுகளைக் கொன்று நப்பின்னையும் தானுமாக “ என் மனம் குடிகொண்டிருந்தாயே ” என்பதற்கு ஏற்ப குடியாய் இருந்தான் என்பர்.
மிகவும் எளியவன்: எம்பெருமான் அடியாரல்லாதார்க்கு மிகவும் தூரத்தில் இருப்பவன். அடியார்க்கு மிகவும் கிட்டியிருப்பவன். இரண்டும் முறையே துரியோதனன் முதலானோரிடமும் பாண்டவர்களிடமும் காணலாம். இப்படிப்பட்ட தன்மையனை “ என் சிந்தையுள் நின்ற மாயன்” என்கிறார். அதாவது ஆழ்வார் விரும்பாமலிருக்க ஆழ்வார் இதயத்தில் வந்து புகுந்து நித்யவாசம் செய்யும் வியப்பானவன் என்று சுவைபட உரைப்பர் பிள்ளை. இந்த எம்பெருமான் இருக்கும் மலையானது. “மணி வாள் ஒளி வெண் தரளங்கள் வேய் விண்டுதிர் வேங்கடம்” என்பர். அதாவது மூங்கில்கள் முற்றி வெடித்து வெண்மையான முத்துக்களையும், ஒளியுடைய ரத்தினங்களையும் உடையதான பெருமை மிக்கிருப்பதாகும் என்பர் பிள்ளை. மேலும் “அடியல்லது மற்று அறியேன் ” என்ற தொடரை ஆழ்வாருக்கும் ஆயனுக்குமாகக் கொண்டு “எதையும் விரும்பாதவன் வேறு கதியற்று என் பக்கலிலே வந்து புகுர விருப்பத்தோடு கூடிய நான் அவனை விட்டுப் போவேனோ? என்று பிள்ளையின் உரை இன்சுவையே வடிவெடுத்ததாகும்.
மேலும் அவனுடைய எளிமையை அனுபவித்த ஆழ்வார் “ வந்தாய் என் மனம் புகுந்தாய் மன்னி நின்றாய்” என்று பாசுரமிடுகிறார். அதாவது, வைகுண்டம் கலவியிருக்கையாயிருக்க, ஆழ்வார் விரும்பாமலிருக்கும் போதும் தான் இருந்த இடம் தேடி வந்து புகுந்தான் என்றவாறு. மன்னி நின்றாய் என்ற இடத்தில் பிள்ளை அநுபவம் கொள்ளைமாளா இன்பமாயிருக்கும். அதாவது வைகுண்டத்தில் கலவி இருக்கையாக இருக்கக்கூடவே, “நாம் இங்கே வந்து ஆழ்வார் மனத்தில் சிறைப்பட்டோம் ” என்னும் வருத்தமின்றிக்கே, ஆழ்வார் பக்கலிலே புகுந்திருக்கப்பெற்ற இது பெறாப்பேறாய். தனக்கு முன்பு இல்லாத செல்வம் பெற்றவனாய் ஒளியுடன் இருந்தான் என்கிறார். இது பற்றியே “நந்தாத கெழுஞ்சுடரே ” என்கிறார். அது மட்டுமல்ல. “சிந்தா மணியே ” என்கிறபடியே “இவன் ஒன்றை எனக்கு என்று நினைப்பது காண் நாம் அத்தைக் கொடுக்கைக்கு என்று இருந்தானாயிற்று” என்கிறார். “ரத்னாநி தனதாந்யாநி ச ” என்று பகவானைப் பற்றிய ஞானம் பிறந்தால் மணியையும் தான்யங்களையும் விட வேண்டும் அப்படி விட மாட்டாத மணி - சிந்தா மணியான வேங்கடவன் என்கிறார். அப்படிப்பட்ட வேங்கடவன் தன்னுடைய தலைவனாம் தன்மை யைக் காட்டி தன்னை அவனுக்காகினமை தோற்ற “திருவேங்கடம் மேய எந்தாய் ” என்கிறார். பரபக்தியாவது அரை நொடியும் அவனை ஒழியச் செல்லாமை உண்டாகையலன்றோ என்று உரைப்பர். பரமபதத்திலே நித்ய சூரிகள் பயமில்லாத இடத்தில் பயசங்கை பண்ணி பரிய இருக்கிறவன் தான் இப் பூமியிலே எழுந்தருளியிருக்கிறான். இப்பூமியில் பயன் உண்டன்றோ, அதனால் திருமலையை திருவேடுவர் எப்போதும் ஏறிட்ட வில்லும் தாங்களுமாய் உணர்ந்து இருந்து இராமாவதாரத்தில் இராமனை வேடுவரான குகப் பெருமாள் இர வெல்லாம் உணர்ந்திருந்து காத்தாப்போலே திருவேங்கடவனைக் காப்பார்கள் என்பர். அந்த மலையப்பனோ “மல்லார் திரள்தோள் மணி வண்ணன் ” என்கிறபடியே மிடுக்கு மிக்க தோளையுடைய அழகான வடிவையுடையவன் என்கிறார். இப்படி வேடர்க்கும் வேங்கடவனுக்கும் அரணாகத் தோள் மிடுக்குடைய ஆழ்வார் அருளிய இப்பதிகத்தைக் கற்க வல்லவர்கள் நித்ய சூரிகளைப்போலே நித்ய கைங்கர்யமே தங்களுக்கு யாத்ரையாகப் பெறுவார்கள் என்பர்.