பதிவு செய்த நாள்
04
ஜூன்
2018
01:06
கடவுளிடத்தில் பக்தி கொள்வது என்பது இரண்டு விதத்தில் ஏற்படலாம். ஒன்று, முந்தைய பிறவிகளில் செய்திருந்த பக்தியின் தாக்கம் மறுபிறவியிலும் தொடர்வது, இதற்கு உதாரணம், பிறவி முதலே இறைவனிடத்தில் பக்தி பூண்ட பிரஹலாதன், துருவன் போன்றோர், இரண்டாவது, குடும்பத்தில் பெற்றோர் நியாயம், நேர்மை, தர்ம வழியில் வாழ்ந்து, குழந்தைகளுக்கும் சிறு வயது முதலே தர்மங்களைக் கூறி, அவர்களது உடலையும், உள்ளத்தையும் தூய்மைப்படுத்துவது.
இறைவனிடம் பக்தி கொண்டிருப்பவரது பக்தியின் தரத்துக்கேற்றவாறு இறைவன் அவரவருக்கு வெவ்வேறு விதங்களில் தனது கருணையைப் பொழிகிறான். மலையிலிருந்து கீழே உருட்டி விட்டாலும், நெருப்பி லிட்டுப் பொசுக்கினாலும், யானையை விட்டு தலையை இடரச் சொன்னாலும் தனது பக்தியிலிருந்து சிறிதும் வழுவாத பிரஹலாதனைக் காப்பாற்றியது ஒருவிதம். அனல் வாதம், புனல் வாதம் செய்து சம்பந்தரை வெல்ல நினைத்த சமணர்களிடமிருந்து அவரை இறைவன் காத்ததாகட்டும், அபிராமி பட்டரை இறைவி காத்ததாகட்டும், இவ்விஷயங்களிலெல்லாம் அவரவர்தம் பக்தியை மெச்சி இறைவன் காத்தருளியது சரித்திரமாகும்.
மற்றொரு வகையில், இறைவனிடத்தில் குருட்டுப் பக்தியில்லாமல் தனது விசாரத்தினால் மட்டுமே உலகில் விதியாக வருவதை அப்படியே ஏற்றுக் கொள்ளும் பக்குவம் அடைந்தவரும் சிலருண்டு. உதாரணமாக, வேதாந்த தேசிகர் எனும் வைணவப் பெரியவர், வரதராஜஸ்தவம் என்ற காஞ்சி வரதனைக் குறித்து இயற்றப்பட்ட 50 பாடல்களில் ஒரு பாடல் இவ்விதமான மாத்யமிக பக்தியை, அதாவது லாஜிக்கை துணைக்கொண்டு இறைவனின் கருணையை தனக்குச் சாதகமாகக் கருதும் மனப்பாங்கை வளர்த்துக் கொள்ளும் வழியையும் காண்பித்துக் கொடுக்கிறது அதாவது.
அஞாத நிர்கமம் அனாகம வேதினம் மாம் அந்தம்
கிஞ்சித் அவலம்பனம் அஸ்னுவானம்
ஏதாவதீம் கமயிது: பதவீம் தயாளோ:
ஸேஷாத்வலேஸநயநே க இவாதிபார:
அதாவது, ஓ.... இறைவா வரதனே! எவ்வழி நான் வந்தேன் என்பதும் எனக்குத் தெரியாது. எங்கு போகப் போகிறேன் என்பதும் எனக்குத் தெரியாது. ஏனெனில், நான் முன் பிறப்பும், வரும் பிறப்பும் அறியாத கண்ணில்லாத குருடன், கம்பையோ, துணையையோ கொண்டுதான் நகர்ந்து முன்னேற முடியும். அவ்வாறிருந்தும் பிறப்பதற்கு முன்பிருந்தும், பிறந்த பிறகும் இந்த நிமிஷம் வரை என்னை வழிநடத்தி இவ்வளவு தூரம் அழைத்து வந்து விட்ட பெருமாளே! இன்னும் கடக்க வேண்டிய தூரம் அதிகமோ, குறைவோ எனக்குத் தெரியாது. ஆனால், நீ என்னை பத்திரமாக அழைத்துச் சென்று விடுவாய் எனும் நம்பிக்கை உள்ளது. இது உனக்குக் கடினமான காரியமும் அல்ல என்று பொருள்.