பதிவு செய்த நாள்
04
ஜூன்
2018
01:06
ஒரு சமயம் பரமனின் மனைவி உமாதேவி, தன் உடலில் பூசியிருந்த சந்தனத்தை வழித்தெடுத்து, தன் கற்பனையில் தோன்றிய ஓர் ஆண் மகவின் திருவுருவை வடித்தாள். அதற்கு உயிர்கொடுத்தாள். அந்தக் குழந்தை உமாதேவியை ‘அம்மா ... ’ என்றழைத்து உமாதேவியும் அந்த பாலகனை அனைத்து முத்தமிட்டாள். இந்த நிகழ்வு நடந்தபோது, சிவபெருமான் கயிலையில் ஓரிடத்தில் தியானத்தில் ஆழ்ந்திருந்தார். எனவே உமாதேவி சிவலிங்க பூஜை மேற்கொள்ள தீர்மானித்தாள். பூஜைக்கு இடையூறு நேரக்கூடாதென்று எண்ணிய தேவி. தான் உருவாக்கிய பாலகனிடம், “என்னை யாராவது பார்க்கவந்தால் இங்கு அனுமதிக்காதே ” என்று அன்புக் கட்டளையிட்டாள். சிறுவனும் கையில் பெரிய தண்டத்துடன், உமாதேவி பூஜை செய்யும் மாளிகைமுன் காவலுக்கு நின்றான். அந்தவேளையில் ஈசனையும் உமாதேவியையும் தரிசிப்பதற்காக தேவர்கள் அங்குவர, அவர்கள் அனைவரையும் தடுத்து நிறுத்தினான் பாலகன். தியானம் கலைந்த சிவபெருமான் உமாதேவியை நோக்கிவந்தார். அவரையும் தடுத்து நிறுத்திய பாலகன், “என் அன்னையின் ஆணைப்படி நான் யாரையும் உள்ளே செல்ல அனுமதிக்கமாட்டேன்” என்றான்.
“நான் யார் தெரியுமா? ” என்று கோபத்துடன் கேட்டார் ஈசன். “நீங்கள் யாராக இருந்தாலும் அனுமதிக்க முடியாது. என் அன்னை சிவபூஜை செய்து கொண்டிருக்கிறார். நீங்கள் திரும்பிச் செல்லலாம்!” என்றான். கோபம் கொண்ட சிவபெருமான், தன் திரிசூலத்தை அந்த பாலகன்மீது எய்ய, அது பாலகனின் தலையைக் கொய்து... பாலகன் கீழே விழுந்தான். அப்போது பூஜையை முடித்துவிட்டு வெளியே வந்த உமாதேவி தன்மகன் தலைசிதறி வீழ்ந்து கிடப்பதைக்கண்டு துயருற்றாள். நடந்ததையறிந்து கண்ணீர் விட்டாள். “என் மகன் மீண்டும் உயிர்பெற வேண்டும் ” என்று சிவபெருமானிடம் வேண்டினாள். சிவபெருமான் யோசித்தார். வீழ்ந்து கிடந்த சிறுவனின் தலைசிதறி சின்னா பின்னமாகக் கிடந்தது. உடனே தேவர்களை அழைத்த சிவன் மகா விஷ்ணுவுக்குத் தகவல் தெரிவிக்கும்படி கட்டளையிட்டார். மகாவிஷ்ணு அங்கு விரைந்து வந்தார். இதற்கு வழிதான் என்ன என்று அவர் யோசித்துக் கொண்டிருக்கையில், சிவபெருமான், “இன்னும் ஐம்பது வினாடிக்குள், இன்று பிறந்த, அதுவும் தெற்கு திசையில் தலைவைத்துப் படுத்திருக்கும் ஒரு சிசுவின் தலையைக் கொண்டு வாருங்கள். அதை உமாதேவி உருவாக்கிய பாலகன் உடலில் பொருத்திவிடலாம் ” என்றதும், மகாவிஷ்ணு தேவகணங்களுடன் புறப்பட்டார்.
வனப்பகுதியில் தேடி வருகையில் பிறந்து சில நாட்களான குழந்தைகள்தான் தென்பட்டார்கள். வினாடிகள் நகர்ந்துகொண்டிருந்தன. அங்கே ஓரிடத்தில் யானை ஒன்று கன்றை ஈன்றுவிட்டு மயங்கிக் கிடந்தது. சற்றுதள்ளி யானைக் கன்று தெற்கு திசையில் தலைவைத்த நிலையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தது. அதன் உயிரைப் பறிக்க எமதர்மராஜனும் அங்கு தோன்றினார். இன்னும் பத்து வினாடிகளில் இன்று பிறந்த சிசுவின் தலை வேண்டுமென்பதால், அந்த யானைக் கன்றின் உயிரை எமன் பறிப்பதற்குமுன் மகாவிஷ்ணு சக்கராயுதத்தால் அதன் தலையை வெட்டினார். அதை எடுத்துக்கொண்டு உடனே கயிலை சேர்ந்தனர். அந்த யானைக் கன்றின் தலையை அசுவினிதேவர்கள் பாலகன் உடலில் பொருத்தினார்கள். ஆனால் உயிர் வரவில்லை. உடனே, சிவபெருமான் சிறுவனின் கால்களை அழுத்தினார். கால்கள் அசைந்தன. வயிற்றில் கைவைத்தார். இப்படியாக அனைத்து உறுப்புகளிலும் கைவைத்துக் கொண்டே வந்தவர் மார்பில் கை வைத்து ஆசிர்வதித்தார். பாலகன் அசைத்தான்; எழுந்தான். ‘அம்மா ’ என்று அழைத்துக்கொண்டே உமாதேவியிடம் சென்றான்.
உமாதேவி முதலில் அந்த யானைத்தலை பாலகனை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. ஆனால், அம்மா என்று அந்தப் பாலகன் அழைத்த குரல் அவள் மனதை மாற்றியது. ‘மகனே ’ என்று அவனை அன்போடு அணைத்துக்கொண்ட உமாதேவி. ‘இவர்தான் உன் தந்தை ’ என்று அறிமுகப்படுத்தினாள். தன் தந்தையின் பாதங்களில் விழுந்து வணங்கினான். தும்பிக்கை முகம்கொண்ட பாலகன். ‘மகேன, இனி நீதான் இந்த உலகத்திற்கு முதல்வன். யாராக இருந்தாலும், உன்னை முதலில் வழிபட்டே அனைத்து காரியங்களையும் செய்ய வேண்டும். உன்னை வழிபடாமல் சென்றால், தோல்வி தான் கிட்டும். இது நான் உட்பட எல்லாருக்கும் பொருந்தும். என்றும் சிரஞ்சீவியாக இருப்பாயாக ” என்று வாழ்த்தினார். (இதுதான் விநாயகர் அவதரித்த கதை என்கிறது. புராணம், இருந்தாலும் விநாயகரின் அவதாரம் குறித்து புராணங்களில் வேறு பல கதைகளும் உள்ளன.)