பதிவு செய்த நாள்
04
ஜூன்
2018
01:06
சந்திரன் சாப விமோசனம் பெறும் பொருட்டு 27 நட்சத்திரங்களுடன் சேர்ந்து கிருஷ்ணரை வழிபட்ட தலமே உடுப்பி, உடு என்றால் நட்சத்திரம்; பா என்றால் தலைவர். நட்சத்திரங்களின் தலைவர் சந்திரன் உடுபா என்று சந்திரனைக் குறிக்கும் சொல்லே உடுப்பி என மருவி அழைக்கப்படுகிறது. கடலில் புயலில் சிக்கித் தவித்துக்கொண்டிருந்த கப்பலில் கிருஷ்ண விக்கிரகம் இருப்பதைத் தமது ஞான திருஷ்டியால் கண்ட மத்வாசாரியார், விக்கிரகத்தை மீட்டு இங்கே பிரதிஷ்டை செய்திருக்கிறார். மத்வாசாரியரால் இயற்றப்பட்ட துவாதச பாசுரம் இன்றம் இந்த கோயிலின் பகவானுக்கு சேவிக்கப்படுகிறது. மத்வாசாரியார், தம்மால் ஏற்படுத்தப்பட்ட எட்டு மடங்களின் பீடாதிபதிகள் உடுப்பி கிருஷ்ணரை பூஜிக்கும்படி ஒரு நியதியை ஏற்படுத்தினார். ஒவ்வொரு மடத்தின் பீடாதிபதியும் தனித்தோ அல்லது இளைய பீடாதிபதியுடன் சேர்ந்தோ பூஜை செய்வர். ஒவ்வொரு மடாதிபதியும் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை மாறுவார்கள். இப்படி மாறும் வைபவம் பரியாயம் என்று அழைக்கப்படுகிறது. எட்டு மடங்களின் பெயர்கள்; பேஜாவரா, புட்டிகே, பாலிமார், அதமார், சோதே, கன்னியூர், சிறூர் மற்றும் கிருஷ்ணபுரா.
இந்த கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் கிருஷ்ண விக்கிரகம், ருக்மணி பிராட்டியார் வழிபட்ட சாளக்கிராமத்தால் ஆனது. இந்தத் தலத்தின் தீர்த்த மண்டபத்தில் அருளும் கருடபகவான், அயோத்தியிலிருந்து வாதிராஜ தீர்த்தரால் கொண்டு வரப்பட்டவர் என்கிறார்கள். இங்குள்ள மாதவ புஷ்கரணிக்கு வருடத்துக்கு ஒரு முறை புனித கங்கை வருவதாகக் கூறுகின்றனர். ஒன்பது வெள்ளியினால் செய்த ஜன்னல்கள் மூலமே பகவான் கிருஷ்ணரை தரிசிக்க முடியும். உடுப்பி கிருஷ்ணரின் கருவறை - கிழக்குப் பக்கக் கதவு விஜய தசமியன்று மட்டுமே திறக்கப்படுகிறது. கிருஷ்ணரின் 24 வகையான நிலைகள் படங்களாக இந்தக் கோயிலில் வைக்கப்பட்டுள்ளன. கனகதாசர் உடுப்பிக்கு வந்தபோது, அவருக்குக் கோயிலுக்கு உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. அவர் மனமுருகி கிருஷ்ணரை வேண்டினார். அவருக்கு அருள்புரிய விரும்பிய கிருஷ்ணர், கருவறையின் பின்புறம் துளையை உண்டாக்கி, அந்தத் துளையின் பக்கம் தான் திரும்பி புன்னகையுடன் நின்று கனகதாசர் வழிபட்டு மகிழும்படி செய்தார். இந்த்துளையே கனகனகிண்டி என அழைக்கப்படுகிறது.
உடுப்பியில் வெகு விமர்சையாகக் கொண்டாப்படும் திருவிழாக்கள்; ரத ஸய்தமி, மாத்வ நவமி, ஹனுமத் ஜெயந்தி, கிருஷ்ண ஜன்மாஷ்டமி, நவராத்திரி மஹோத்சவம், மாத்வ ஜயந்தி (விஜய தசமி), நரக சதுர்த்தசி, தீபாவளி, கீதா ஜயந்தி. கிருஷ்ண ஜன்மாஷ்டமி தினத்தன்று ஆண்கள் புலி வேடம் அணிந்து கொண்டு ஊர் முழுவதும் நடமாடிக் கொண்டுவருவது மகிழ்வான நிகழ்வாகும்.இந்தத் தலத்தில் ரத யாத்திரையின்போது மூன்று தேர்கள் பவனி வருவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இந்த வைபவத்தின் போது பக்தர்கள் பசு தானம், துலாபாரக் காணிக்கை தந்து பகவானுக்கு நன்றி செலுத்துகின்றனர். முப்பது வருடங்களுக்கு முன்பு ரம்ஜான் பண்டிகையின்போது மூன்றாவது பரியாய சுவாமிகளால் நடத்தப்பட்ட இந்து முஸ்லிம் சம்மேளன், தற்போதுள்ள ஐந்தாவது பரியாய விஷ்வேச தீர்த்த சுவாமிகளால் நடத்தப்பட்டது. இந்த சம்மேளன், மக்கள் சாதி மத வேறுபாடின்றி ஒற்றுமையுடனும், சகிப்புத்தன்மையுடனும், அமைதியாக வாழ்வும் உடுப்பி கிருஷ்ணர் கோயிலில் நடத்தப்படுவதாகும்.