த்வஜபடம், ஹரி வாஹணம்: ஒவ்வொரு சுபநிகழ்ச்சிக்கு முன்னரும் த்வாஜாரோஹணம் - கொடியேற்றம் ஒரு இன்றியமையாத நிகழ்வாக நம் முன்னோர்கள் எண்ணினார். ஏழுமலையானின் எழிலான புரட்டாசி மாதம் பிரம்மோத்ஸவத்தில் முதல் நாள் உத்ஸவமே த்வஜாரோஹணம். அன்று காலை கருடக்கொடியை நன்கு அலங்கரித்து, நான்கு திருமாட வீதிவுலவாக வந்த பின்னர். பக்தர்களின் நடுவில், வேதகோஷங்கள், மங்கள வாத்தியங்கள் முழங்க, சம்பிரதாயப்படி த்வஜஸ்தம்பம் மீது ஏற்றுவார்கள். இவ்வாறாக திருமலையப்பனின் பிரம்மோத்ஸவம் ஆரம்பமாகிறது. இந்த பிரம்மோத்ஸவம் முடிவடைந்த பிறகு த்வஜாவரோஹணம் செய்து கொடியை மந்திரகோஷங்கள் முழங்க, கீழே இறக்கி விடுவார்கள். இந்த புனிதமான கொடியை த்வஜபடம் என்கிறார்கள்.
தேவர்களுக்கு வரவேற்பு: பிரம்மோத்ஸ்வ ஆரம்பத்தில் நடக்கும் இந்த த்வஜாரோஹணத்திற்கு முக்கிய பங்கு உண்டு. த்வஜஸ்தம்பம் மீது இந்த த்வஜபடம் பறப்பது தேவலோகத்தில் உள்ள எல்லா தேவர்களுக்கும் இந்த பிரம்மோத்வத்திற்கு அழைப்பு விடுப்பதாக ஐதீகம். த்வஜம் மீது “கருடாழ்வார் ” சித்திரம் வரையப்பட்டிருக்கும். கருடாழ்வார் அழைத்தவுடன் முக்கோடி தேவர்களும் வந்து பிரம்மோத்ஸவத்தை கண்டு களிப்பார்கள். அவர்கள் மட்டும் காணாமல் உலகில் உள்ள எல்லா உயிர்களும் கண்ட பலனை அடையுமாறு செய்கிறார்கள். கொடியின் மீது நாகாபுரணங்கள் தரித்த கருடனின் ஓவியம் வரையப்பட்டுள்ளது. கருடனின் தென்பகுதியில் உள்ள (தக்ஷிண ஹஸ்தம்) ஆகாயத்தை பார்த்த வண்ணம் உள்ள இந்த திருக்கரம் தேவர்களை பிரம்மோத்ஸவத்திற்கு அழைக்கும் விதமாக உள்ளது. வாம ஹஸ்தம் சூரிய சந்திர சாட்சியாக பூர்ண கலசத்தை காண்பித்து சகல சுகத்தை கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது. இதுமட்டுமல்லாமல் த்வஜம் மீது ஐந்து கலசங்கள் பஞ்ச பூதங்களின் வடிவாக அமைந்துள்ளன. ஹாரதி, மணி, தூபம் எல்லாம் சேர்ந்து கொடியை மிகவும் பொலிவடையச் செய்கிறது.
கொடியினைத் தயாரிக்கும் முறை: திருமலையான் கொடி தயார் செய்வது எளிதான விஷயம் அல்ல. இந்த வாய்ப்பு திரு. பேரூர் சிவப்பிரசாத்திற்கு கிடைத்திருக்கிறது. ஸ்ரீனிவாசனே தனக்கு இந்த வாய்ப்பை வழங்கியதாக எண்ணும் இவர் சுமார் முன்று தசாப்த காலமாக இந்த புனிதமான பணியைச் செய்து திருமலையான் திருவருளுக்கு பாத்திரமாகியுள்ளார். ஸப்தகிரி சமய மாத இதழில் ஓவியராக பணிபுரியும் இவர் பிரம்மோத்ஸவ சமயத்தில் இந்த த்வஜபடத்தை மிகவும் நிஷ்டையுடன் தயார் செய்கிறார். கொடி தயார் செய்ய ஏழு அடி தவள வஸ்த்திரத்தை கொடுப்பார்கள். இந்த வஸ்திரத்தை ஒரு நாள் முழுவதும் மஞ்சள் தண்ணீரில் நனைத்து வைப்பார்கள். காய வைத்து எலுமிச்சை உப்பு நீரில் நனைத்து மிகவும் தூய்மை செய்வார்கள். இதனால் மஞ்சள் நிறம் மிகவும் பிரகாசமாக தெரியும். அந்த விதமாக தயார் செய்த வஸ்திரத்தின் மீது கருடாழ்வார் ஓவியம் வரைவார்கள். இயற்கையான நிறங்களைக் கொண்டு இந்த கருட படத்தை வரைகிறார்கள். மரத்திலிருந்து வரும் ரப்பர், சிவப்பு மண், கரி பொடி சேர்ந்த நிறத்தின் உதவியால் சிவப்பிரசாத் கருடன் ஓவியத்தை வரைகிறார். தன்னுடைய பூர்வ ஜன்ம புண்ணிய பலத்தினாலும், ஏழுமலையானின் ஆசிர்வாதத்தாலும் இந்த புண்யமான வேலையை கடந்த இருபத்தைந்து வருடங்களாக செய்து வருவதாகவும், இவ்வாறு ஸ்வாமி பணியினை செய்து வருவது தனக்கு சந்தோஷமளிக்கிறது என்று கூறுகிறார். பிரம்மோத்ஸவத்தில் நாமும் கலந்து கொண்டு அந்த தேவதேவனின் அருளைப் பெறுவோம்.