பதிவு செய்த நாள்
05
ஜூன்
2018
10:06
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் தீ விபத்தை தவிர்க்க, அணையா விளக்கு வைக்க கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்து உள்ளது. கடந்த பிப்ரவரியில், மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டது. இதுபோன்று ஏற்படாமல் தடுக்க, முக்கிய கோவில் அதிகாரிகளுக்கு அறநிலையத் துறை ஆணையர் ஜெயா உத்தரவிட்டார். இதையடுத்து, ராமேஸ்வரம் கோவிலில், மெகா அணையா விளக்கு வைக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 77 ஆயிரம் ரூபாய் செலவில், 4 அடி உயர பித்தளை அணையா விளக்கை, கோவில் சுவாமி சன்னதி முன் நந்தி மண்டபத்தில் வைத்தனர். தீபம் ஏற்றும் பக்தர்கள், எண்ணெய்யை அணையா விளக்கின் மேல்புறத்தில் உள்ள குழாயில் ஊற்றினால், அது, 8 லிட்டர் கொள்ளளவு உள்ள தொட்டியில் சேமிக்கப்படும். தீபம் எரிவதற்கு ஏற்ப, கோவில் ஊழியர்கள் குழாயை திறந்து விடும் போது, நேரடியாக தீப குவளையில் எண்ணெய் விழுந்ததும், தீபம் அணையாமல் தொடர்ந்து எரியும். இதை கோவில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.