பதிவு செய்த நாள்
05
ஜூன்
2018
10:06
காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, நேற்று காலை, தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் புனித நீராடினர். திருவிழா : காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவம், கடந்த மாதம் துவங்கியது. இதில் முக்கிய நிகழ்ச்சியாக, மூன்றாம் நாள் கருட சேவை உற்சவம் கோலாகலமாக நடந்தது. தொடர்ந்து, ஏழாம் நாள் தேர்த் திருவிழா நடைபெற்றது. தினமும், சுவாமி வெவ்வேறு வாகனங்களில் வீதியுலா புறப்பாடு நடைபெற்று வருகிறது. ஒன்பதாம் நாள் உற்சவமான நேற்று காலை, ஆள் மேல் பல்லக்கில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.
பிரம்மோற்சவம் நிறைவு: அதை தொடர்ந்து, காலை, 11:30 மணிக்கு, கோவில் குளத்தில் தீர்த்தவாரி நடந்தது. காலை, 10:00 மணிக்கு, குளத்தில் சுவாமி இறங்குவார் என, எதிர்பார்க்கப்பட்டது. மற்ற பூஜைகள் முடிந்து சுவாமி வர காலதாமதம் ஆனது. இதனால், மக்கள் குளத்தில் நீண்ட நேரம் வெயிலில் காத்திருந்து நீராடினர். பாதுகாப்பிற்காக, குளத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டன. நேற்று இரவு, புண்ணிய கோடி விமானம் வாகனத்தில், சுவாமி வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்றுடன், 10 நாள் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.