பதிவு செய்த நாள்
06
ஜூன்
2018
12:06
காஞ்சிபுரம்: பிரம்மோற்சவத்தின்போது, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் குதிரை திடீரென இறந்தது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவம், மே, 27ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும், காலை, மாலையில் சுவாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது. பிரபல உற்சவமான, மே, 29ல் கருடசேவையும், ஜூன், 2ல் தேரோட்டமும், நேற்று முன்தினம், தீர்த்தவாரி உற்சவமும் நடந்தது. 10ம் நாளான நேற்றுடன், பிரம்மோற்சவம் நிறைவடைந்தது. வரதராஜ பெருமாள் கோவிலுக்கு, பெருந்தேவி என்ற பெண் குதிரையும், வரதராஜன் என்ற ஆண் குதிரையும் உள்ளது. சுவாமி புறப்பாடு செல்லும்போது, சுவாமிக்கு முன்பாக, குதிரை வாகனத்தில், ’டங்கா மேளம்’ கொட்டியபடி செல்வர். இந்நிலையில், நேற்று முன்தினம், பெருந்தேவி குதிரை திடீரென பரிதாபமாக இறந்தது. கோவில் பிரம்மோற்சவத்தின்போது, குதிரை இறந்ததால், பக்தர்கள் இடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து, உதவி ஆணையர் மற்றும் நிர்வாக அறங்காவலர், எம்.விஜயன் கூறியதாவது: பெருந்தேவி குதிரைக்கு, 35 வயதாகிறது. வயது மூப்பின் காரணமாக, சரியாக உண்ப தில்லை. மேலும், நோய்வாய்பட்டு உடல் மெலிய துவங்கியதால், மூன்று ஆண்டுகளுக்கு முன், வீதியுலாவிற்கு அழைத்து செல்வது நிறுத்தப் பட்டது. தொடர்ந்து, மருத்துவர்கள் பரிசோதித்து சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும், நேற்று முன்தினம் மதியம், 1:30 மணிக்கு இறந்தது. இறந்த குதிரைக்கு, பெருமாள் மரியாதை செலுத்தப்பட்டு, கிழக்கு ராஜ கோபுரம் அருகே உள்ள தோப்பில், அன்று மாலையே முறைப்படி இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது. மூன்று ஆண்டுகளாக, 19 வயதுடைய வரதராஜன் என்ற குதிரைதான், வீதியுலாவிற்கு அழைத்துச் செல்லப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -