பதிவு செய்த நாள்
06
ஜூன்
2018
12:06
ஓமலூர்: சாலை விரிவாக்கத்துக்கு பள்ளம் தோண்டியபோது, பழமையான கற்சிலை கண்டெடுக்கப்பட்டு, அருங்காட்சியத்தில் ஒப்படைக்கப்பட்டது. ஓமலூர் அடுத்த செம்மாண்டப்பட்டியில், நெடுஞ்சாலைத்துறையினர், சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர். நேற்று காலை, பெருமாள் டீக்கடை அருகே, கால்வாயை தோண்டியபோது, 4 அடி உயரத்தில், 2 அடி அகலத்தில், பெரிய பாறை போன்று தென்பட்டது. அதை, பொக்லைன் மூலம் தோண்டி வெளியே எடுத்தபோது, சிலை என, தெரிந்தது. ஒரு கை தூக்கியபடி, மற்றொரு கை கீழே உள்ளபடி, முழு உருவம் செதுக்கப்படாத நிலையில், சிலை கீழே தரையில் ஊன்றும்படி, கூம்பு வடிவில் இருந்தது. அங்குள்ள, சித்த மருத்துவ பிரிவு அருகே, தரையில் சிலையை ஊன்றி, மாலை அணிவித்து, மஞ்சள், குங்குமம் வைத்து, மக்கள் வழிபாடு நடத்தினர். ஆர்.ஐ., கண்ணன் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள், சிலையை எடுத்துச் செல்ல முயன்றபோது, மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். போலீசார், அவர்களை சமாதானப்படுத்தினர். இதையடுத்து, காடையாம்பட்டி தாலுகா அலுவலகம் கொண்டு செல்லப்பட்டது. கண்ணன் கூறுகையில், ”சிலையை, சேலம் அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கவுள்ளோம்,” என்றார். மக்கள் கூறுகையில், ’60 ஆண்டுகளுக்கு முன், இப்பகுதியில் சிலை செய்யும் குடும்பத்தினர் பலர் இருந்தனர். அப்போது, செதுக்கப்பட்டதாக இருக்கலாம்’ என்றனர்.