கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் வசந்த உற்சவ பூர்த்தி விழா நடந்தது. கள்ளக்குறிச்சி புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ வைபவத்தினை தொடர்ந்து கோடை வெப்பம் தணியவும், மழை வேண்டியும், பெருமாள், தாயாருக்கு வசந்த உற்சவம் 3 நாட்கள் நடந்தது. கடந்த 4ம் தேதி மாலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாள் உற்சவர்களுக்கு திருமஞ்சனம் நடத்தி, அபிஷேகம் செய்தனர். பட்டாடை உடுத்தி, மலர் மாலை அலங்காரம் செய்து மண்டபத்தில் எழுந்தருள செய்து, நாலாயிர திவ்யபிரபந்தம் வாசிக்கப்பட்டது. சேவை, சாற்றுமுறை, அலங்கார தீபங்கள் வழிபாடு நடத்தினர். பூஜைகளை தேசிக பட்டர் செய்து வைத்தார்.