பதிவு செய்த நாள்
08
ஜூன்
2018
12:06
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலுக்கு, தலைமுடி சேகரிப்பு, பிரசாத கடை உள்ளிட்ட ஏலத்தின் மூலம், 93 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. திருப்போரூரில் உள்ள பிரசித்தி பெற்ற கந்தசுவாமி கோவில் கடைகள், வரும், ஜூலை, 1 முதல், 2019 ஜூன், 30 வரையிலான ஓராண்டு காலத்திற்கான ஏலம் நடந்தது.காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் உதவி ஆணையர் விஜயன், ஆய்வாளர் கோவிந்தராஜ், செயல் அலுவலர் நற்சோணை ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது.இதில், காணிக்கை தலைமுடி சேகரிப்பு, 44.16 லட்சத்திற்கும், பிரசாத கடை, 36.51 லட்சம் ரூபாய்க்கும் ஏலம் எடுக்கப்பட்டது. மேலும், கோவில் வளாகத்தில் நெய் தீபம் விற்பதற்கான ஏலம், 10.20 லட்சத்திற்கும், ஆடு, கோழி சேகரித்து கொள்வதற்கான ஏலம், 39 ஆயிரம் ரூபாய்க்கும் ஏலம் விடப்பட்டது.
வெள்ளி உரு விற்பனை செய்வதற்கு, 60 ஆயிரத்திற்கும், தற்காலிக கடை வரி வசூல், 67 ஆயிரத்திற்கும், வாகன பாதுகாப்பு கட்டணங்கள் பெறுவது, 30 ஆயிரம் மற்றும் சிதறு தேங்காய், உப்பு, மிளகு ஆகியவை சேகரிப்பு, 10 ஆயிரம் ரூபாய்க்கும் ஏலம் போனது. மொத்தத்தில், திருப்போரூர் கந்தசுவாமி கோவிலுக்கு முன் வருவாயாக, 92.93 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. இது, கடந்த ஆண்டை காட்டிலும், 5.48 லட்சம் ரூபாய் கூடுதல் என, கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.