பதிவு செய்த நாள்
21
ஜன
2012
10:01
கரூர்: ""ஆன்மிகம் சிலரால் திசை திருப்பப்பட்டு, பரிகார தலங்களாக கோவில்கள் மாற்றப்படுகிறது என கோவை காமாட்சிபுரி ஆதினம் பேசினார். கரூர் பொது சமய சன்மார்க்க சங்கம் 61ம் ஆண்டு விழா நடந்தது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கோவை காமாட்சிபுரி ஆதினம் பேசியதாவது: ஆன்மிகம் சிலரால் திசை திருப்பப்பட்டு, பரிகார மையங்களாக கோவில்கள் மாற்றப்படுகிறது. விளக்கு போடுகிறோம் என்ற பெயரில், அதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் அல்லாமல் கோவில் முழுவதும் விளக்கேற்றுகின்றனர். சுவர்களிலும், தூண்களிலும் எண்ணையை அப்பி பாழாக்குகின்றனர். பழங்கள், பூசணி, தேங்காய் மூடிகளை படையலிட்டு பசியால் வாடுபவனுக்கு கொடுக்க வேண்டுமே தவிர விளக்கு போடவும், பிழிந்து வீணாக்கவும் கூடாது. பழம் பிழியும் மெஷினாக மூல விக்ரகங்கள் ஆக்கப்படுவது தவறு. சிவனே முதன்மையான தெய்வம். "நமசிவாய என்ற ஐந்து எழுத்து மந்திரமே அனைத்துக்கும் தீர்வு. திருநள்ளாறு தீர்த்தக்குளம் கிழிந்த உள்ளாடைகளால் நிரப்புவது தவறு. ஒருவர் இறந்தால், சிவம் ஆகிறார் என்கிற நாம், சவம் என்று கோவில் முழுவதும் கழுவி விடுவது மூடப்பழக்கம். நன்கு வாழ்ந்தவர் இறந்தால், "அடைப்பு என்று கூறி வீட்டை பூட்டுவது முட்டாள்தனம். சிரிப்பும், அழுகையும் கலந்ததே வாழ்வு. அதில் தாய், தந்தையே முதல் வணக்கத்துகுரியவர்கள். இல்லாத பசித்தவனுக்கு கொடுப்பதே அன்னதானம்.
வேகமான உலகில் ஒப்பந்த முறையில் மேலை நாடுகளில் நடக்கும் திருமண முறை வந்துவிடுமோ என அச்சம் எழுகிறது. இவ்வாறு அவர் பேசினார். சங்கத்தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். சின்னப்பன், கண்ணன், சுப.லட்சுமணன் உள்பட பலர் பங்கேற்றனர்.