பதிவு செய்த நாள்
21
ஜன
2012
10:01
திருநெல்வேலி:நெல்லையப்பர் கோயிலில் பத்ர தீபத்திருவிழாவை முன்னிட்டு சென்னை மகதி குழுவினரின் பக்தி இசை நிகழ்ச்சி நடந்தது. இன்று(21ம் தேதி) சென்னை வீரமணிராஜூவின் பக்தி இசை நிகழ்ச்சி நடக்கிறது.நெல்லை ஜவுளி வியாபாரிகள் மகமை சங்கத்தின் சார்பில் கடந்த 140 ஆண்டுகளாக நெல்லையப்பர் கோயிலில் பத்ரதீப திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பத்ர தீப திருவிழா நாளை (22ம் தேதி) நடக்கிறது. அன்று காலை 9 மணிக்கு 11 வெள்ளிக்குடங்கள், பால் குடம் எடுத்து வீதிஉலா நடக்கிறது. மதியம் 12 மணிக்கு அம்பாள் கோயில் ஊஞ்சல் மண்டபத்தில் பஞ்ச மூர்த்திகளுக்கு 308 சங்காபிஷேகம் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடக்கிறது.இதைமுன்னிட்டு நேற்று முன்தினம் நெல்லை ஜவுளி வியாபாரிகள் மகமை சங்கத்துடன் இணைந்து நெல்லை கல்சுரல் அகாடமி சார்பில் 51 நாதஸ்வரம், 51 தவில் வித்வான்கள் பங்கேற்ற மங்கள இசை நிகழ்ச்சி நடந்தது.நேற்று இரவு 7 மணிக்கு நெல்லையப்பர் கோயில் நின்றசீர் நெடுமாறன் கலையரங்கில் சென்னை மகதி குழுவினரின் பக்தி இசை நிகழ்ச்சி துவங்கியது. கத்ரி சதிஷ்குமார் மிருதங்கம் வாசிக்க, திருவனந்தபுரம் வினு வயலின், ஆலந்தூர் ராஜகணேஷ் கஞ்சிரா வாசிக்க சென்னை மகதி பக்திபாடல்கள் பாடினார்.இந்நிகழ்ச்சியில் தினமலர் ஜெயஸ்ரீ வைத்தியநாதன், வக்கீல் வைத்தியநாதன், நெல்லை கல்சுரல் அகாடமி தலைவர் குணசேகரன், செயலாளர் காசிவிஸ்வநாதன், ஜவுளி வியாபாரிகள் மகமை சங்கத்தின் தலைவர் கணபதியா பிள்ளை, செயலாளர் சொனா.வெங்கடாச்சலம் உட்பட பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.இன்று(21ம் தேதி) நெல்லையப்பர் கோயில் நின்றசீர் நெடுமாறன் கலையரங்கில் சென்னை வீரமணி ராஜூவின் பக்தி இசை நிகழ்ச்சி நடக்கிறது. முன்னதாக சென்னை மகதி இசைக்குழுவினர்களுக்கு தினமலர் ஜெயஸ்ரீ வைத்தியநாதன் சால்வை அணிவித்து கவுரவப்படுத்தினார். மேலும் நாதஸ்வர கலைஞர்களுக்கு நெல்லை கல்சுரல் அகாடமி சார்பிலும் சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டது.ஏற்பாடுகளை தினமலர், தி சென்னை சிலக்ஸ், ஓட்டல் சரவண பவா, சிவகாமி ஜூவல்லர்ஸ், கோடீஸ்வரன் ஜூவல்லர்ஸ் செய்தனர்.புட்நோட்: நெல்லையப்பர் கோயிலில் பத்ர தீப திருவிழாவை முன்னிட்டு நின்றசீர் நெடுமாறன் கலையரங்கில் சென்னை மகதி குழுவினரின் பக்தி இசை நிகழ்ச்சி நடந்தது.