பதிவு செய்த நாள்
26
ஜூன்
2018
12:06
திருப்பூர்: திருப்பூர், பலவஞ்சிபாளையத்தில் உள்ள ஸ்ரீ காளிகுமாரசாமி கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது. திருப்பூர், பலவஞ்சிபாளையத்தில், சக்தி கவுமார திருத்தலமாக, ஸ்ரீ காளிகுமாரசாமி கோவில் அமைந்துள்ளது. கோவிலில் திருப்பணிகள் நிறைவுற்று, கும்பாபிஷேக விழா, கடந்த, 22ல், கணபதி ஹோமத்துடன் துவங்கியது. கோவிலருகே அமைக்கப்பட்ட யாகசாலையில், நான்கு கால யாகபூஜைகள் நடந்தன. அதன்பின், நேற்று அதிகாலை நிறைவு கால யாகபூஜைகளுக்கு பின், பூஜிக்கப்பட்ட கலசங்களை சிவாச்சார்யார்கள், ஊர்வலமாக எடுத்து சென்று, மூலவர் மற்றும் பரிவார விமானம், மூலவ மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் செய்தனர். விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, ஸ்ரீ காளி குமாரசுவாமியை வழிபட்டனர். முன்னதாக, கோவை, சரவணம்பட்டி கவுமார மடாலய ஆதீனம், குமரகுருபர சுவாமிகள், பக்தர்களுக்கு அருளுரை வழங்கினார். விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று மாலை, 5:00 முதல், 6:00 மணிக்குள் மண்டலாபிஷேக பூஜை, 48 நாட்கள் தொடர்ந்து நடப்பதாக, கோவில் நிர்வாகக்குழுவினர் அறிவித்துள்ளனர்.